

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழனி மலைக்கோயிலுக்கு பட்டா இல்லை என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா கேட்டு தேவஸ்தானம் போராடியும், பழனி மலைக் கோயிலுக்கு தற்போதுவரை வருவாய்த் துறை சார்பில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தேனி மாவட்டம் போடி மலையில் தொடங்கி, திண்டுக்கல் மாவட்டம் வழியாக திருப்பூர் அமராவதி அணை வரை 2,018 சதுர கி.மீ. பரப்பில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பழனி மலை என அழைக்கப்படுகிறது. இந்த மலை 65 கி.மீ. நீளமும், 45 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த மலையை சார்ந்த ஒரு உட்பிரிவு மலை மீது அமைந்துள்ளது பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில்.
திருப்பதிக்கு அடுத்த நிலை
இந்தக் கோயிலுக்கு தென்னிந்தியாவில் திருப்பதிக்கு அடுத்து அதிக வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் பழனி மலை முருகன் கோயிலுக்கு தற்போதுவரை வருவாய்த் துறை பட்டா வழங்கவில்லை என்ற விவரம் தெரிய வந்துள்ளது. பழனி முருகன் கோயில் அமைந்துள்ள பழனி மலை, வருவாய்த் துறைக்குச் சொந்தமான அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது.
வருவாய்த் துறையிடம், பழனி முருகன் கோயில் தேவஸ்தானம் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா கேட்டு போராடி வரு கிறது. ஒவ்வொரு ஆண்டும், தேவஸ்தானம் பழனி முருகன் கோயில் மலைக்கு பட்டா கேட்டு விண்ணப்பிப்பதும், அந்த விண்ணப்பத்தை வருவாய்த் துறை நிராகரிப்பதும் வாடிக்கையாக உள்ளது.
இதுகுறித்து பழனி தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பழனி முருகன் மலையை வழி பாட்டுத்தலமாக மட்டுமே அனுபவத்தில் வைத்துள்ளோம். பட்டா இல்லாததால் சொந்தம் கொண் டாட உரிமை இல்லை.
நூறு ஆண்டுகளாக பழனி மலைக்கோயிலுக்கு பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர், தாசில்தார் என பலருக்கும் விண்ணப்பித்து விட்டோம். தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பழனி மலையில் ஒரு பகுதியில் வசிக்கும் 150 குடும்பத்தினருக்குக் கூட பீமா சான்று வழங்கி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், பழனியாண்டவருக்கு மட்டும் பட்டா கொடுக்க மறுக்கின்றனர்.
பட்டா இல்லாததால் என்ன பிரச்சினை?
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “வருவாய்துறை அனுமதி இல்லாமல் மலைக் கோயிலில் புதிய கட்டுமானப் பணிகள், விரிவாக்கப் பணிகள் எதையும் மேற்கொள்ள முடியாது. பழனி மலையில் மக்கள் குடி யேறுவது அதிகரித்துள்ளது. அவர்கள் குடியேறுவதை தேவஸ்தான நிர்வாகத்தால் தடுக்க முடியாது. அவர்களுக்கு வருவாய்துறை பீமா சான்று வழங்கி மின்இணைப்பு, ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் கோயில் மலைப் பகுதி குடியிருப்புப் பகுதியாக மாறும்பட்சத்தில் கோயிலின் புனித தன்மை பாதிக்கப்படும்’’ என்றனர்.
இதுகுறித்து பழனி தாசில்தார் வரதராஜன் கூறியதாவது:
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தே, பழனி மலை வருவாய்த் துறையினரின் வசம் உள்ளது. தேவஸ்தானம் பட்டா கேட்டு விண்ணப்பித்து வருவது உண்மை தான். அவர்களுக்கு பட்டா கொடுப்பதை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
பட்டா கொடுப்பதில் என்ன சிக்கல்?
இதுகுறித்து வருவாய்த் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறிய போது, முகலாய மன்னர்களுக்கு முன் இந்தியாவை ஆட்சி செய்த ஷெர்ஷா மன்னர்தான், நில அளவைத் துறையை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். அவர்தான் பிர்கா, கிராமம் எனப் பிரித்து நிலத்துக்கு பட்டா வழங்கும் நடை முறையை அறிமுகம் செய்தார். அவர்தான் தாசில்தார் என்ற வார்த்தையையே கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
தாசில் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியைக் குறிப்பதாகும். அதை ஆட்சி செய்பவரே தாசில்தார் என அழைக்கிறோம். அவருக்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சியில், நில அளவைத் துறையில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள், விதிகளை உருவாக்கிச் சென்றுள்ளனர். அதனால், பழனி கோயிலுக்கு பட்டா வழங்குவது சாதாரண விஷயமில்லை. இந்த கோயிலுக்கு பட்டா வழங்கினால் மலை மீது உள்ள பட்டா இல்லாத மற்ற கோயில்களுக்கும் வழங்க வேண் டிய நெருக்கடி ஏற்படும் என்றார்.
சட்ட சிக்கல் ஏற்படும்: ஆட்சியர்
இதுகுறித்து ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் கேட்டபோது, ‘பழனி மலைக்கோயில் நிலம், கோயில் புறம்போக்காக அவர்கள் அனுபவத்தில் உள்ளது. பட்டா கொடுப்பதாக இருந்தால் யார் பெயரில் கொடுப்பது. கோயில் பெயரில் கொடுக்க முடியாது. இணை ஆணையர் பெயரில் கொடுத்தால் அவர் மாறுதலாகி சென்றுவிடுவார். அவருக்கு பின் அவரது பெயரில் உள்ள அந்த பட்டாவை என்ன செய்வது. மீண்டும் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும். அதனால் சட்ட சிக்கல் ஏற்படும். மலைப்பகுதியில் யாருக்கும் பட்டா வழங்க இயலாது’ என்றார்.