தொலைத்தொடர்பு தகராறு தீர்வு - மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தொடக்கம்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தகவல்

தொலைத்தொடர்பு, இணையவழி குற்றங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டை தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, பி.வில்சன் எம்பி, தென்மாநில கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.சங்கரநாராயணன், ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.பட்டேல் பங்கேற்றனர். படம்: பு.க.பிரவீன்
தொலைத்தொடர்பு, இணையவழி குற்றங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டை தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, பி.வில்சன் எம்பி, தென்மாநில கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.சங்கரநாராயணன், ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.பட்டேல் பங்கேற்றனர். படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

சென்னை: தொலைத்தொடர்பு தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயமானது எளிய மக்களின் நலனுக்காகவே தொடங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறினார்.

தொலைத்தொடர்பு தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சார்பில் ‘தொலைத்தொடர்பு, இணையவழி குற்றங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள்’ எனும் தலைப்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், தொடங்கி வைத்து பேசியதாவது; தற்போது தகவல் தொழில்நுட்ப வசதிகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பெருநிறுவனங்களுக்கு மட்டுமானது என்ற எண்ணத்தில் இருக்கக்கூடாது. இந்த தீர்ப்பாயம் எளிய மக்களுக்காகவே தொடங்கப்பட்டுள்ளது. இங்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள், ஆதார், விமானக் கட்டணம் என பலதரப்பட்ட வழக்குகளை தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம். இந்த கருத்தரங் கத்துக்கு குறைந்தளவிலான வழக்கறிஞர்கள் வந்துள்ளது வருத்தம் அளிக்கிறது. இந்த தீர்ப்பாயத்தின் விவரம் மற்றும் புதிய சட்டங்களை வழக்கறிஞர்கள் தெரிந்துகொண்டு மக்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும். அதற்காகத்தான் இந்நிகழ்வு சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய வாய்ப்புகள் கிடைக்கும்போது தவறவிடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசும்போது, ‘தொலைத்தொடர்பு மற்றும் சைபர் துறைகளில் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. அதற்கு தீர்வு காண்பதற்கு இந்த தீர்ப்பாயம் பயனுள்ளதாக இருக்கும். நீதிமன்றங்களைவிட இந்த தீர்ப்பாயத்துக்கே அதிக அதிகாரம் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இங்கு நடைபெறும் சைபர் மோசடிகளையும் இந்த தீர்ப்பாயத்தின் மூலமாக விசாரித்து தீர்வு காண முடியும்’’ என்றார்.

திமுக எம்பி பி.வில்சன் பேசும்போது, ‘‘தகவல் தொழில்நுட்பம் நமது சமுதாயத்தின் முதுகெலும்பாக மாறிவிட்டது. எனவே, தொலைத்தொடர்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு இந்த தீர்ப்பாயத்தை பொதுமக்கள் அணுக வேண்டும். ஆனால், டெல்லியில் உள்ள தீர்ப்பாயத்தை இங்குள்ள மக்கள் அணுகுவது கடினம். எனவே, இந்த தீர்ப்பாயத்தின் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்வில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.சங்கரநாராயணன், தீர்ப்பாயத்தின் தலைவர் டி.என்.பட்டேல், தொலைத்தொடர்பு தீர்ப்பாய வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் மன்ஜூல் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in