TET விவகாரம்: சென்னையில் பிப்.17-ல் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

மதுரையில் இன்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சங்கங்களின் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.  | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
மதுரையில் இன்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சங்கங்களின் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
Updated on
1 min read

மதுரை: மதுரையில் இன்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதுகுறித்து தென்மாவட்ட பொறுப்பாளர்கள் ஜெயப்பிரகாஷ், பிரகாஷ், மல்லிகா, முத்துமணி ஆகியோர் கூறியது: “கடந்த 10 ஆண்டுகளாக 1 முதல் 10-ம் வகுப்புவரை புதிய ஆசிரியர் நியமனம் நடைபெறவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகளாக காத்திருக்கும் எங்களை நியமிக்கவில்லை.

இதற்கிடையே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மறு நியமன போட்டித் தேர்வு என்ற அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை (அரசாணை எண்:149) தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

மேலும், பணி நியமனம் பெறும் வயதை 57 ஆக உயர்த்த வேண்டும். கரோனா காலத்தில் அரசு பள்ளியில் 15 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், அத்தகைய மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு போதிய ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.

எனவே, இக்கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 17-ல் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இதில் மாநிலம் முழுவதுமிருந்து 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்" என்றனர். அப்போது, தென்மாவட்ட பொறுப்பாளர்கள் முத்துராமலிங்கம், முத்துக்குமார், மேகலா ஆகியோர் உடனிருந்தனர்.

-

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in