

மத்திய அமைச்சர் கட்கரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்: ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய அரசின் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பினை தமிழக அரசு வழங்கும் என்று உறுதியளித்தும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ‘மாநில அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் ஒத்துழைக்கவில்லை என்பது போன்ற தோற்றம், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலால் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. அது உண்மையல்ல. மாநில மற்றும் மத்திய அரசுகளால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டாமல், அனைத்து முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும் விரைவுபடுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் தமிழக அரசு மேற்கொண்டு வருவகிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
பரந்தூரில் 200-வது நாளை எட்டிய போராட்டம்: சென்னை அருகே பரந்தூர் விமான நிலையம் குறித்து ஆய்வு அறிக்கை தயார் செய்ய சர்வதேச ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை அங்கு 200-வது நாளாக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உட்பட 13 கிராமங்களில் இருந்து சுமார் 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த விமான நிலையம் ஏகனாபுரத்தை மையமாக வைத்து அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளதாலும், அந்த கிராமத்தில் மொத்தமாக நிலம் எடுக்கப்படுவதாலும் பொதுமக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் - அமைச்சர் தகவல்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2024-ம் ஆண்டு இறுதியில் துவங்கி, 2028-ல் முடிக்கப்படும் என ஜப்பான் நிதி நிறுவனம் தெரிவித்துள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கொசு தொல்லை அதிகரிப்பால் சென்னை மக்கள் கடும் அவதி: விதிகளை முறையாகப் பின்பற்றாமல் மாநகராட்சி அலட்சியம் காட்டுவதால் சென்னையில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், கொசுக்கடியால் அவதிக்குள்ளாவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வாரந் தோறும் நீர்வழித் தடங்களில் கொசுப் புழுக்களின் அடர்த்தியைப் பரிசோதித்து, அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை வகுத்திருந்தால், இந்த அளவு கொசுக்கள் பெருக்கம் அடைந்திருக்காது. அனைத்து வகைதடுப்பு நடவடிக்கைகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள மாநகராட்சி தவறிவிட்டது. இதன் காரணமாகவே மாநகரில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது என்று பூச்சியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் அறிவித்த பின்பு சாலைப் பணிகள்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் அறிவித்த பின்பு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளர்.
மேலும் அவர் கூறும்போது, "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளரை முன்மொழியவும், வழிமொழியவும் ஆள் இல்லை. டிடிவி தினகரனுக்கு தேர்தல் என்றால் பயம். நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தில்லுடன் தேர்தலில் போட்டியிடுகிறோம். ஆனால் திமுக, காங்கிரஸ் கட்சியை நிறுத்துகிறது. துணிச்சல் இருந்தால் திமுக நிற்க வேண்டியது தானே?” என்று அவர் கூறினார்.
“ஐடிஐ கல்வி நிறுவனங்களை சீர்குலைக்கும் மத்திய அரசு” : “ஐடிஐ கல்வி நிறுவனங்களின் தரத்தை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட புதிய தொழிற்கல்வி முறையை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
அதானி விவகாரம்: நிர்மலா சீதாராமன் விளக்கம்: அதானி குழுத்தின் மீதான நிதி முறைகேடு புகார் குறித்து இந்திய நிதி கண்காணிப்பு அமைப்புகள் ஆராய்ந்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அமைப்பு ரீதியான வலிமையும் திறமையும் கொண்டவை நமது நிதி கண்காணிப்பு அமைப்புகள். இதுபோன்ற விவகாரங்களை கையாளும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் சுதந்திரமாக இயங்கக்கூடியவர்கள். இப்போது மட்டுமல்ல; எப்போதுமே அவர்கள் சுதந்திரமாகவே இயங்கி வருகிறார்கள்” என்றார்.
மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளும் இந்தியா: இன்னும் 2 மாதங்களில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்று ஐ.நா. நிபுணர் குழு தெரிவித்துள்ளது. ஐநா சபையின் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கிய 1950 ஆண்டு முதல் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்து வருகிறது. இந்தப் பெயரை அது இன்னும் 2 மாதங்களில் இழக்கும் என்றும், வரும் ஏப்ரலில் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றும் ஐ.நா. நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
இன்னிங்ஸ் வெற்றியை சுவைத்த இந்தியா!: அஸ்வினின் அபார பந்துவீச்சின் துணையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்தது. இதன்மூலம் 223 ரன்கள் இந்தியா முன்னிலையில் இருந்தது. இதையடுத்து, 3-வது நாளான சனிக்கிழமை களமிறங்கிய ஆஸ்திரேலியா 32.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்களில் சுருண்டது.
இதன்மூலம் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை சுவைத்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா, சமி தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
துருக்கி மீட்புப் பணியில் இந்திய மோப்ப நாய்கள் தீவிரம்: பூகம்பத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் துருக்கியில் இந்திய மீட்புக் குழுவினர் ‘ஆபரேஷன் தோஸ்த்’என்ற பெயரில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களாக இந்தப் பணி தொடர்கிறது. இந்திய மீட்புக் குழுவுடன் ஜூலி, ரோமியோ, ஹனி, ராப்போ என்ற நான்கு மோப்ப நாய்களும் அனுப்பப்பட்டன. இந்த மோப்ப நாய்கள் மீட்புப் பணிகளில் சிறப்பான பயிற்சி பெற்ற நாய்கள். பூகம்பத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள துருக்கியிலும் சிரியாவிலும் இவை அளித்து வரும் பங்களிப்பு முக்கியமானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.