கருணாநிதி பிறந்தநாளன்று அவரை நேரில் சந்திப்பதை தவிர்க்கவும்: தொண்டர்களுக்கு திமுக வேண்டுகோள்

கருணாநிதி பிறந்தநாளன்று அவரை நேரில் சந்திப்பதை தவிர்க்கவும்: தொண்டர்களுக்கு திமுக வேண்டுகோள்
Updated on
1 min read

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளன்று அவரை நேரில் சந்திப்பதை தவிர்ப்பதே அவருக்கு தரக்கூடிய சிறந்த பிறந்தநாள் பரிசு என்பதை உணர்ந்து ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என திமுக தலைமைக் கழகம் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா நிகழ்வுகள் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செம்மையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

80 ஆண்டுகால பொதுவாழ்வில் தமிழ்ச் சமுதாயத்தின் மேன்மைக்காக ஓய்வறியாமல் தொடர்ந்து உழைத்து, தொண்டால் பொழுதளந்த கருணாநிதியின் உடல்நலன் குன்றி, தொடர்சிகிச்சையிலும் ஓய்விலும் இருப்பதை கழகத் தோழர்கள் அனைவரும் நன்கறிவர்.

மருத்துவர்களின் அக்கறை மிகுந்த சிகிச்சையினால் அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அவரது பிறந்த நாளன்று, அவரை நேரில் காணும் வாய்ப்பு நிச்சயம் கிடைத்திடும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் லட்சக்கணக்கான தோழர்களின் ஆவலை நிறைவு செய்திடலாம் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவருக்கு இன்னும் சிறிதுகாலம் ஓய்வு தேவை என்றும், நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க பார்வையாளர்களை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகமும் கழகமுமே தனது வாழ்வு என அயராது பாடுபட்ட நம்முடைய உயிருக்கு நிகரான தலைவர் அவர்கள் விரைந்து முழு நலன் பெற, கழகத் தொண்டர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.

பிறந்தநாளில் கருணாநிதியின் முகம் கண்டு, அகம் மலர்ந்து, அன்புப் பரிசுகள் வழங்கி மகிழும் அவரது உடன்பிறப்புகள் இம்முறை, தலைவருக்கு ஓய்வளித்து அவர் விரைந்து நலன் பெற உறுதுணை செய்யும் வகையில், நேரில் சந்திப்பதை தவிர்ப்பதே அவருக்கு தரக்கூடிய சிறந்த பிறந்தநாள் பரிசு என்பதை உணர்ந்து ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in