

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான இளநிலை, முதுநிலை இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) நிரந்தரமாக விலக்கு கோரும் சட்ட மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. அந்த மசோதாக்கள் குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தும், கடிதங்கள் மூலமாகவும் முதல்வர் கே.பழனிசாமி வலியுறுத்தினார். பல்வேறு அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள், சமூக ஆர் வலர்களும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும்படி தொடர்ந்து வலி யுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசின் மசோதாக்களுக்கு இதுவரை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இதற்கிடையே இளநிலை மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் சுமார் 88 ஆயிரம் மாண வர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வர உள்ளன. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, ‘‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற அரசு தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்த வாரத்துக்குள் தெளிவான ஒரு முடிவு கிடைக்கும்’’ என்றார்.