Published : 11 Feb 2023 06:29 AM
Last Updated : 11 Feb 2023 06:29 AM

தருமபுரி | பாலக்கோடு பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கோவக்காய்: 5 முதல் 10 ஆண்டு வரை விளைச்சல் தருவதால் ஆர்வம்

தருமபுரி: பாலக்கோடு பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கோவக்காய்: 5 முதல் 10 ஆண்டு வரை விளைச்சல் தருவதால் ஆர்வம்தருமபுரி அருகே சாகுபடியாகும் கோவக்காய் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள புலிகரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேடியம்மாள். இவர், தனது நிலத்தின் ஒரு பகுதியில் கோவக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். 60 சென்ட் பரப்பில் 540 செடிகளை நடவு செய்துள்ள இவர், ‘பராமரிப்பு சுமைகள் சற்று கூடுதல் தான் என்றாலும், கோவக்காய் சாகுபடி ஓரளவு லாபம் தரக்கூடிய பயிர் தான்’ என்றார்.

இதுகுறித்து, வேடியம்மாள் கூறியது: விவசாயத்தில் ஈடுபடும் உறவினர் ஒருவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் தேனி மாவட்டத்தில் இருந்து கோவக்காய் நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்தோம். நடவு செய்த ஓரிரு வாரத்தில் செடிகள் புது தளிர் விடத் தொடங்கின. நடவு செய்த நாளில் இருந்து 60-வது நாளில் செடிகளில் பூ, பிஞ்சுகள் விடத் தொடங்கி விட்டன. சொட்டுநீர் பாசனம் இச்செடிகளுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

செடிகளை நடவு செய்யும் முன்பாகவோ அல்லது நடவு செய்த உடனேயோ வயல் முழுக்க கற்களை நடவு செய்து பந்தல் அமைக்க வேண்டும். பந்தல் மேற்பரப்பு 5 அடி உயரத்துக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான், காய்களை குறிப்பாக பெண்கள் அறுவடை செய்வது எளிதாக இருக்கும். பந்தலுக்காக நடப்படும் கற்களுக்கு இடையே இழுத்துக் கட்டப்படும் கம்பிகள் வலிமையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், மழையின்போது செடிகளின் பாரம் அதிகரித்து பந்தல் தரையோடு சரிந்து விட வாய்ப்புள்ளது.

கோவக்காய் செடிகளை சராசரியாக பராமரித்தால் 5 ஆண்டுகள் வரையும், முறையாக பராமரித்தால் 10 ஆண்டுகள் வரையும் விளைச்சல் தரும். 2 ஆண்டுக்கு ஒருமுறை செடிகளுக்கு கவாத்து செய்வதன் மூலம் தொடர்ந்து தரமான காய்களை விளைவிக்க முடியும். செம்மண் நிலம் கோவக்காய் சாகுபடிக்கு மிக பொருத்தமானது. வண்டல், களிமண் நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். ஆனால், சவுளு மண் எனப்படும் களர் நிலங்களில் தொடர் மழைக்காலங்களில் செடிகள் இறந்து விடுகின்றன.

வாரம் ஒருமுறை வயல் முழுக்க அறுவடை செய்தால் சராசரியாக 300 கிலோ காய்கள் கிடைக்கும். கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.60 வரை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலை கிடைக்கும். ராயக்கோட்டை பகுதியில் உள்ள மொத்த வியாபாரி ஒருவரிடம் காய்களை விற்பனை செய்கிறோம். அவர் சென்னை, கேரளா, பெங்களூருவுக்கு அனுப்புகிறார்.

எங்கள் வயலில் உள்ள செடிகளுக்கு மீன் கரைசல் உள்ளிட்ட இயற்கை முறை தயாரிப்புகளை மட்டுமே தெளிக்கிறோம். அடியுரமாக எருவை மட்டுமே பயன்படுத்துகிறோம். எனவே, நச்சுத் தன்மையற்ற காய்கள் கிடைப்பதால், எங்களிடம் காய்களை வாங்கும் வியாபாரி சில நேரங்களில் சிங்கப்பூருக்கும் இந்தக் காய்களை ஏற்றுமதி செய்கிறார். இவ்வாறு கூறினார்.

பட விளக்கம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த புலிகரை அருகே சாகுபடி செய்யப்பட்டுள்ள கோவக்காய் வயல். கோவக்காய் வயலில் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி வேடியம்மாள். கற்கள் நட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ள கோவக்காய் வயல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x