

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் திரைப்படத் துறைக்கு சில சலுகைகளை வழங்குமாறு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் (தனி) பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:வாஜ்பாய் ஆட்சியில் திரைப்படத் துறைக்கு தொழில் அந்தஸ்து வழங்கப்பட்டது. அதனால் வங்கிகளிலிருந்து நிதியுதவி கிடைத்தது.
சுஷ்மா ஸ்வராஜ் இத்துறை அமைச்சராக இருந்தபோது நல்ல திரைப்படங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக எந்தவித சொத்து பிணையும் இல்லாமல் படத்தின் மீது நிதியுதவி செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
அதுபோல மீண்டும் இத்துறைக்கு தொழில் அங்கீகாரம் வழங்கி வளர்ச்சிக்கு வழிவகை செய்ய வேண்டும்.இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கேளிக்கை வரி மாறி மாறி இருக்கிறது. ஊடகத்தின் ஆதிக்கத்தால் திரையரங்குகளுக்கு மக்கள் வருகை குறைந்துவிட்டது. ஆகவே பொழுதுபோக்கு வரியை இந்தியா முழுவதும் ஒரே சீராக்க வேண்டும்.
தென்னிந்தியாவில் திரைப்பட காப்பகங்கள் எங்கும் இல்லை. அதனால் தென்னிந்திய மொழி திரைப்படங்களின் நெகடிவ்களை பாதுகாக்க முடியவில்லை. அரிய திரைப்படங்கள் அழிந்து போய்விட்டன. பல அழிந்துகொண்டிருக்கின்றன. தேசிய விருதுகளுக்கு திரைப்படங்களை தேர்ந்தெடுக்க அனைத்து மாநிலங்களிலிருந்தும் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து ஜூரியாக நியமித்து எந்தவித பாரபட்சமும் இல்லாமல் விருதுக்கு படங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். விருது பெறும் படங்களுக்கான தொகையையும் உயர்த்திக் கொடுக்க வேண்டும்.
திரைப்படத் துறையில் தேசிய அளவில் ஒரே மாதிரியான கொள்கை முடிவுகளை ஆராய்ந்து செயல்படுத்த ஏதுவாக தேசிய திரைப்படக் கொள்கை வாரியம் அனைத்து மாநில பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டது. ஆனால், அது செயல்படவில்லை. இந்த வாரியம் செயல்பட்டிருந்தால் நாடு முழுவதும் திரைத் துறையில் தோன்றும் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கு தீர்வு காண வசதியாக இருந்திருக்கும். அந்த வாரியத்தை அமைத்து செயல்பட வைக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.