சென்னை | பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம்: மாநகராட்சி வசூலிக்க முடிவு

சென்னை | பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம்: மாநகராட்சி வசூலிக்க முடிவு
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகரை அழகுபடுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சாலையோர பூங்காக்கள், சாலை திட்டுக்கள், மேம்பாலசுவர்கள் ஆகியவை அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. சாலையோரங்களில் திடக்கழிவுகளைக் கொட்டுவோர் பொதுச் சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டுவோர், கட்டுமான கழிவுகள் கொட்டுவோர் உள்ளிட்டோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக மாநகரில் உள்ள 18 சாலைகளை இன்று முதல் குப்பை இல்லாத சாலைகளாகப் பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த கட்டமாக மாநகரைத் திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் இல்லாத மாநகரமாக அறிவிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக போதுமான அளவில் கழிப்பறைகள் மற்றும்சிறுநீர் கழிப்பிடங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் மாநகராட்சி சட்ட விதிகளின் கீழ் ஏற்கெனவே உள்ள, பொதுஇடங்களில் சிறுநீர் கழிப்போருக்கு ரூ.50 அபராதம் விதிக்கும்முறையை அமலுக்குக் கொண்டுவரமுயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே கால்நடைகள் பிடிப்பு, பிளாஸ்டிக் தடை அமல்,கொசு ஒழிப்புப் பணி போன்றபணிகள் சுகாதார ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், சிறுநீர் கழிப்போருக்கு அபராதம் விதிக்கும் பணியை யாரிடம் வழங்குவது என மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in