

ஹரித்வார்: விவசாயிகள் ஆர்கானிக் மற்றும் இயற்கை விவசாயத்தை பின்பற்றினால், மருத்துவ செலவை குறைக்கலாம் என்று ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்தார்.
இதுதொடர்பாக பதஞ்சலி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி பல்கலைக்கழகத்தில் ஆர்கானிக் மற்றும் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கான ஒருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி ஆர்கானிக் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் ஆர்கானிக் மற்றும் இயற்கை விவசாயத்துக்கான தேசிய மையம், பிராந்திய மையத்தின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சுமார் 500 விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில் உரையாற்றிய பதஞ்சலி அறக்கட்டளையின் நிறுவனர் செயலர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, “விவசாயிகள் முதலில் ஆர்கானிக் மற்றும் இயற்கை விவசாய முறைகளை கடைபிடித்து சொந்த நுகர்வுக்கான உணவை உற்பத்தி செய்ய வேண்டும். இதன்மூலம் குடும்பத்தின் மருத்துவ செலவு வெகுவாக குறையும்” என்றார். விவசாயிகளுக்காக பதஞ்சலி நிறுவனம் செயல்படுத்தும் ‘ஹரித்கிரந்தி’, ‘அன்னடேட்டா’ செயலிகள் மற்றும் டிஜிட்டல் வழி சேவைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
ஆர்கானிக் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து, ஆர்கானிக் மற்றும் இயற்கை விவசாயத்துக்கான தேசிய மையத்தின் இயக்குநர் கக்னேஷ் சர்மா பேசினார். இதுதொடர்பாக உத்தராகண்ட் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து மாநில வேளாண்மை துறை இணை இயக்குநர் ஏ.கே.உபாத்யாய் பேசினார்.
பிரகண்ட் பயோ எனர்ஜி ஃபார்மர் ப்ரொட்யூசர் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் ஹிதேஷ் சவுத்ரி பேசும்போது, விவசாயிகளுக்கான ‘பதஞ்சலி ஃபார்மர் சம்ரிதி’ திட்டத்தில் தொழில்முனைவோர் மற்றும் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
மண்புழு உரம் தயாரிப்பை ஒரு நிறுவனமாக உருவாக்குவது குறித்து தொழில்முனைவோரான கோபால் சர்மா விளக்கினார். ஆர்கானிக் மற்றும் இயற்கை விவசாயிகள் பலரும் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
பதஞ்சலியின் ‘தர்தி கா டாக்டர்’ மண் பரிசோதனை கருவி, பதஞ்சலி சம்ரிதி அட்டை உள்ளிட்டவை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இயற்கை விவசாய முறைகள் குறித்து செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியை பதஞ்சலி ஆர்கானிக் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் பவன்குமார் நெறிப்படுத்தினார்.