Published : 11 Feb 2023 06:18 AM
Last Updated : 11 Feb 2023 06:18 AM
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே நிலவும் பிரச்சினை காரணமாக விசைப்படகு தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் 245 விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே வானிலை எச்சரிக்கை காரணமாக சில நாட்கள் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் தினமும் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை மீன்கள் பிடித்து வரப்பட்டு ஏலம் விடப்படும். கடந்த ஒரு வாரமாக இந்த மீன்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் நாட்டுப் படகுகள் மற்றும் கரைவலை மூலம் பிடிக்கப்படும் மீன்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆனால், கரைவலையில் சரியான மீன்பாடு இல்லாததால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரையில் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் சுனாமிநகரை சேர்ந்த எம்.சக்திவேல் கூறியதாவது: கரைவலை என்பது ஒரு பாரம்பரிய மீன்பிடி முறையாகும். நாட்டுப்படகு மூலம் மீன்பிடி வலையை கரையில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை கொண்டு சென்று விரித்துவிட்டு வந்துவிடுவோம்.
பின்பு குறிப்பிட்ட நேரம் கழித்து கரையில் இருந்து 25 முதல் 30 மீனவர்கள் சேர்ந்து வலையை இழுப்போம். புதிய துறைமுக கடற்கரையில் மூன்று குழுவினர் கரைவலை மீன்பிடித் தொழில் செய்து வருகிறோம். இந்த வலையில் பல்வேறு மீன்கள் கிடைக்கும்.
வடகிழக்கு பருவமழை காலம் தான் கரைவலை மீன்பிடிப்புக்கு ஏற்ற காலமாகும். தற்போது கரைவலை மீன்பிடி சீஸன் முடியும் நிலையில் உள்ளது. இதனால் மீன்பாடு மிகவும் குறைவாக உள்ளது. விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாத நேரத்தில் நாங்கள் பிடிக்கும் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அதுபோல கடந்த ஒரு வாரமாக விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாததால் எங்கள் மீன்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது.
ஆனால், மீன்பாடு இல்லாததால் குறைந்த மீன்களே கிடைக்கின்றன. ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மீன்களே வலையில் வருகின்றன. இது வலை இழுக்கும் மீனவர்களின் சம்பளத்துக்கே போதுமானதாக இல்லை. கடந்த மாதம் ஓரளவுக்கு நல்ல மீன்பாடு இருந்தது. தற்போது கோழித் திவனத்துக்கு பயன்படும் கோலா மீன்களே அதிகம் கிடைக்கின்றன. சாளை, நெத்திலி மீன்களும் சிறிதளவு கிடைக்கின்றன.
சாதாரண நாட்களில் சாளை மீன்களை கிலோ ரூ.20 முதல் ரூ.30-க்கு தான் எடுப்பார்கள். தற்போது விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் சாளை மீன்களை கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை எடுக்கின்றனர். இது நல்ல விலை. ஆனால், குறைவான மீன்களே கிடைக்கின்றன. அதுபோல நெத்திலி மீன்களை உலர வைத்து கருவாடாகவே விற்பனை செய்வோம். நெத்திலி கருவாடு கிலோ ரூ.200 முதல் ரூ.220 விலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT