Published : 11 Feb 2023 06:32 AM
Last Updated : 11 Feb 2023 06:32 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தங்களது சொந்த செலவில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். இதனால் இங்கு முறைகேடுகள் நடைபெற வாய்ப்பில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அருகே உள்ள பரம்பூரில் சம்பா, கோடை ஆகிய 2 பருவங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கு முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக விவசாயிகளின் சொந்த செலவில் 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
மேலும்,பரம்பூர் பகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் கொண்டு வரும் நெல்லைகொள்முதலுக்கு அனுமதிப்பதில்லை. அத்துடன், அன்றாடம் கொள்முதல் செய்யப்படும் நெல்அளவு குறித்த விவரம் தகவல் பலகையில் ஒட்டப்படுகிறது. இதனால், இங்கு எவ்வித முறைகேடுகளும் நடைபெறுவதிலலை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பரம்பூர் பெரியகுளம் நீரை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் பி.பொன்னையா கூறியது: பரம்பூர் பெரியகுளம் (கண்மாய்) தண்ணீரைக் கொண்டு 250 ஏக்கர் நிலம் பாசனம் செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் நெல் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலேயே விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதற்கு நெல் தூற்றி எடைபோடும் இடம், மூட்டை தையல் போடப்படும் இடம், ரசீது வழங்கும் இடம் உட்பட 4 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
அதேபோல, நெல்லை தூற்றி, மூட்டைகளை ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபடும் சுமைப் பணியாளர்களுக்கான கூலியை விவசாயிகளே கொடுக்கின்றனர்.
இங்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விவரம் முழுவதும் தகவல் பலகையில் ஒட்டப்படும். இதுகுறித்த விவரம் விவசாயிகளின் வாட்ஸ்அப் குரூப்களிலும் பகிரப்படுகிறது. இதனால்இம்மையத்தில் எவ்வித முறைகேடுக்கும் வாய்ப்பு இல்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதுடன், விவசாயிகளால் நிர்வகிக்கப்படும் ஒரே நேரடிநெல் கொள்முதல் நிலையமாகவும் இது செயல்படுகிறது. இதை மற்ற கொள்முதல் நிலையங்களிலும் பின்பற்றினால் எவ்வித புகார்களுக்கும் இடமிருக்காது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT