Published : 11 Feb 2023 06:22 AM
Last Updated : 11 Feb 2023 06:22 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டையிலுள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிக்கின்றனர்.
இங்கு பயிலும் மாணவிகள் கல்லூரி முடிந்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப பேருந்துகளை பிடிக்க கடுமையாக போராட வேண்டியிருக்கிறது. கூட்டம் நிரம்பி வழிவதால் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவிகள் பயணிக்கின்றனர். இந்த அபாய பயணம் குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மாணவியரின் பெற்றோர் உள்ளிட்ட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
போக்குவரத்து கழகம் விளக்கம்: இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரையிலும், அதைத் தொடர்ந்து மதியம் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் 2 கட்டமாக செயல்பட்டு வந்தது.
இக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்லூரி தொடங்கும் நேரம், மதியம் மற்றும் மாலையில் கல்லூரி முடிவடையும் நேரங்களுக்கு ஏற்றாற்போல் போதிய பேருந்து வசதி அரசு போக்குவரத்து கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவிகள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் கடந்த 18-ம் தேதி முதல் கல்லூரி செயல்படும் நேரத்தை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரை என்று மாற்றிவிட்டது. கல்லூரி செயல்படும் நேர மாற்றம் குறித்து போக்குவரத்து கழக அலுவலர்களிடம் கல்லூரி நிர்வாகம் முன்கூட்டியே கலந்து ஆலோசிக்கவில்லை.
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி ராணி அண்ணா மகளிர் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்து அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, கடந்த 20-ம் தேதி முதல் 12 பேருந்துகளை கல்லூரியில் இருந்தும், 2 பேருந்துகள் கல்லூரி வழியாகவும் என்று மொத்தம் 14 கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் மாலையில் கல்லூரி முடியும்போது பிற்பகல் 3.30 மணி முதல் 4 மணிக்குள் அனைத்து மாணவியரும் கல்லூரியிலிருந்து திருநெல்வேலிக்கு செல்வதற்கு ஏதுவாக பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இதுபோல் பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4 மணிக்குள் கல்லூரியில் இருந்து புதூர், மாறாந்தை வழியாக ஆலங்குளம், ஓடைமறிச்சான், முக்கூடல் மற்றும் காசிநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 4 கட்டணமில்லா மகளிர் பேருந்துகளும், ஆலங்குளம், தென்காசி மற்றும் சுரண்டை செல்வதற்கு 6 புறநகர் பேருந்துகளும் மாணவியரை ஏற்றிச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு, அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேலும் புகார்கள் ஏதும் இருந்தால் 9487599080 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT