

திருவண்ணாமலை: திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக கிடங்கில் இருந்து இலவச வேட்டி, சேலை கடத்தல் எதிரொலியாக திருவண்ணாமலை வட்டாட்சியர் சுரேஷை இடமாற்றம் செய்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை நகரம் அவலூர்பேட்டை ரயில்வே ‘கேட்’ அருகே ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 1,000 இலவச வேட்டி, சேலைகள் கடந்த 7-ம் தேதி அதிகாலை ரோந்து பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்கள், நடத்திய விசாரணையில், “திருவண்ணா மலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கில் இருந்து இலவச வேட்டி, சேலைகளை கடத்தி சென்றது” உறுதியானது.
இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருவண்ணாமலை அடுத்த வட ஆண்டாப்பட்டு அருகே அரசன்குளம் கிராமத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் பரசுராமன்(30), வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் வசிக்கும் துவார கேசன்(28) ஆகியோரை கைது செய்தனர். இலவச வேட்டி, சேலை வைக்கப்பட்டிருந்த கிடங்கு, வட்டாட்சியரின் நேரடி கட்டுப் பாட்டில் இருப்பதாகும்.
இந்நிலையில், திருவண்ணா மலை வட்டாட்சியர் சுரேஷை, பறக்கும் படை வட்டாட்சியராக இடமாற்றம் செய்து ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். கிடங்கில் இருந்து இலவச வேட்டி, சேலை கடத்தப்பட்டதன் எதிரொலியாக வட்டாட்சியர் சுரேஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவருக்கு மாற்றாக, செய்யாறு சிப்காட் நிலம் எடுப்பு சிறப்பு வட்டாட்சியர் சரளா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், திருவண்ணா மலை வட்டாட்சியராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இது குறித்து வருவாய்த் துறை தரப்பில் விசாரித்தபோது, “வட்டாட்சியர் சுரேஷ் இட மாற்றம் என்பது வழக்கமானது. திருவண்ணாமலை வட்டாட்சியராக ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றி வந்ததால் இடமாற்றம் செய்யப்பட் டுள்ளார். இவர், உட்பட 7 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய் யப்பட்டுள்ளனர்” என்றனர்.
அதேநேரத்தில், மாவட்டம் மற்றும் கோட்ட நிர்வாகத்துடன் இணக்கமான சூழலுடன் செயல் பட்டு வந்த வட்டாட்சியர் சுரேஷின் திடீர் இடமாற்றம் என்பது வட்டாட்சியர் அலுவலக ஊழியர் களின் புருவத்தை உயர்த்தி யுள்ளது.
7 வட்டாட்சியர்கள் இடமாற்றம்: திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக பறக்கும் படை சிறப்பு வட்டாட்சியராக திருவண்ணாமலை வட்டாட்சியர் சுரேஷ், திருவண்ணாமலை வட்டாட்சியராக செய்யாறு சிப்காட் (2-ம் பிரிவு) நிலம் எடுப்பு சிறப்பு வட்டாட்சியர் சரளா, கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியராக திருவண்ணாமலை சமூக பாது காப்பு திட்ட வட்டாட்சியர் சாப்ஜான், தண்டராம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் சக்கரை, திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் நிலம் எடுப்பு சிறப்பு வட்டாட்சியராக தண்ட ராம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சுகுணா ஆகியோர் மாற்றப்பட்டனர்.
மேலும், தண்டராம்பட்டு வட்டாட்சியராக திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலக நிலம் எடுப்பு சிறப்பு வட்டாட்சியர் அப்துல்ரகுப், திருவண்ணாமலை சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக தண்டராம்பட்டு வட்டாட்சியர் பரிமளா ஆகியோரை நியமித்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.