Published : 11 Feb 2023 06:04 AM
Last Updated : 11 Feb 2023 06:04 AM

வேலூர் | விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் கட்ட ஏரியை கொடுத்து பல்கலைக்கழகம் வாங்கினேன்: துரைமுருகன் சுவாரசிய பேச்சு

வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுதல், 60 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை ரூ. 14.30 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட அமைச்சர் துரைமுருகன் நேற்று அடிக்கல் நாட்டி வைத்து பேசினார். அருகில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் அமலு விஜயன் உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன் |

வேலூர்: பண்டமாற்று முறையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் கட்ட நான் ஏரியை கொடுத்து, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை வாங்கினேன் என சேர்க்காட்டில் நடைபெற்ற அரசு கல்லூரி, அரசு மருத்துவமனை கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

காட்பாடி வட்டம் சேர்க்காட்டில் ரூ.12.46 கோடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ரூ.14.30 கோடியில் 60 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் வரவேற்றார். அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார்.

இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசும்போது, ‘‘தமிழக முதல்வர் கல்வி, சுகாதாரம் இரண்டையும் இரண்டு கண்களாக பார்க்கின்றார். அந்த இரண்டுக்கு இங்கு அமைச்சர் துரைமுருகன் அடிக் கல் நாட்டியிருக்கிறார். நாங்கள் எல்லாம் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டுவரவே சிரமப்படுகிறோம். ஆனால், 60 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனையை கொண்டு வந்திருக் கிறார்’’ என்றார்.

நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும் போது, ‘‘திருவள்ளுவர் பல்கலைக்கழகம் கொடுத்த அமைச்சர் பொன்முடி இப்போது கல்லூரியை கொடுத்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதை அவர் சும்மா கொடுக்கவில்லை. எல்லா துறைகளும் ஒரே இடத்தில் இருக்கும் ஆட்சியர் அலுவலகம் ஒன்று இருக்கிறது என்றால் அது விழுப்புரம்தான். அந்த இடத்தை கொடுத்தது நான். எல்லாம் பண்டமாற்றுதான். நான் ஏரி கொடுத்தேன், அவர் கல்லூரி (பல்கலைக்கழகம்) கொடுத்தார்.

மாநில பிரிவினையில் ஆந்திராவில் இருந்து பொன்னை தமிழ்நாட்டுக்கு வந்தது. இது தனித்துவிடப்பட்ட பகுதி. ஒருமுறை பிரதமர் நரசிம்மராவை சந்திக்க சென்றபோது பொன்னை எப்படி இருக்கிறது என கேட்டார். பொன்னை பகுதியில் எனக்கு வாக்களித்தால் பொன்னையாற்றில் பாலம் கட்டிக் கொடுப்பதாக கூறினேன். கடந்த 1971-ல் என்னை வெற்றிபெற வைத்தார்கள். நானும் பாலம் கட்டிக் கொடுத்தேன். அந்த பாலம் இப்போது வெள்ளத்தில் சேதமானதால் ரூ.40 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது.

இப்போது 60 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வரு கிறது. அது அடுத்த ஆண்டில் 100 படுக்கைகள் கொண்டதாக மாற்றப்படும். இதற்காக 15 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. காட்பாடி டெல் தொழிற்சாலை எதிரே 15 ஏக்கரில் ஐ.டி பூங்கா கொண்டு வரப்படவுள்ளது. அடுத்த பட்ஜெட்டில் சிப்காட் தொழிற்பூங்கா கொண்டுவருகிறேன். இங்குள்ள ஊருக்கு 10 பேருக்காவது வேலை கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார்.

அரசு மருத்துவமனை: சேர்க்காட்டில் அமையவுள்ள அரசு மருத்துவமனை கட்டிடம் தரைத்தளம் மற்றும் இரண்டு மேல் தளங்களுடன் 3,155.75 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில், தரைத்தளத்தில் சி.டி ஸ்கேன், எக்ஸ்ரே அறை, மருத்துவர், செவிலியர் அறைகள் கொண்டதாக இருக்கும்.

முதல் தளத்தில் ஆய்வகம், காத்திருப்போர் அறை, மருந்தகம் உள்ளிட்டவையும் இரண்டாம் தளம் 26 படுக்கைகள் கொண்ட பெண்கள் பிரிவு, 32 படுக்கைகள் கொண்ட ஆண்கள் பிரிவு, மருந்து சேமிப்பு அறை அமைக்கப்படவுள்ளது. அதேபோல், அரசு கல்லூரி 4,629.04 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் மூன்று மேல் தளங்களுடன் அமைய வுள்ளது. காட்பாடி அடுத்த டெல் தொழிற்சாலை எதிரே சுமார் 15 ஏக்கரில் ஐ.டி. பூங்கா கொண்டு வரப்படவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x