இரு பிரிவினர் மோதல்: கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

இரு பிரிவினர் மோதல்: கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
Updated on
1 min read

இரு பிரிவினருக்கு இடையேயான மோதல் காரணமாக காவல் நிலையம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம் இரு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப் பட்டு வட்டத்துக்கு உட்பட்டது ஆர்.கே. பேட்டை அருகே உள்ளது ராஜாநகரம். இப்பகுதியில் வசிக்கும் இரு தரப்பினருக்கு இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டது. அதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இச்சூழலில், ஆடி கிருத்திகையான கடந்த திங்கள்கிழமை, ஒரு பிரிவினர் தங்களுக்குச் சொந்தமான முருகன் கோயிலுக்கு காவடி செலுத்த வந்தனர். அப்போது கோயிலின் சுவர்களில், கோயிலுக்கு வந்த பிரிவினரை மிரட்டும் விதமான வாசகங்கள், மற்றொரு பிரிவினரால் எழுதப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, அன்று இரு தரப்பினருக்கிடையே மோதல் வெடித்தது. அந்த மோதல் தொடர்பாக, இரு தரப்பினரும் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில், கடந்த திங்கள் புகார் அளித்தனர்.

இந்நிலையில், ஒரு பிரிவினைச் சேர்ந்தோர் தாங்கள் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என காவல் துறையினர்மீது குற்றம்சாட்டி, வெள்ளிக்கிழமை காலை ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, அவர்களை சமா தானப்படுத்திய ஆர்.கே.பேட்டை போலீஸார், மற்றொரு பிரிவினரை யும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால், அந்த மற்றொரு பிரிவினைச் சேர்ந்த காவல் நிலையத்துக்கு செல்லாமல், வெள்ளிக்கிழமை மதியம் திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, இந்த பிரச்சினை குறித்து கோட்டாட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற கோட்டாட்சியர், 26-ம் தேதி காலை ராஜாநகரம் பகுதிக்கு நேரில் வந்து விசாரணை நடத்துவதாக வாக்குறுதி அளித்தார்.

இதற்கிடையே, போலீஸார் நடத்த முயன்ற பேச்சுவார்த்தை யில் மற்றொரு பிரிவினர் பங்கேற் காததால் கோபமடைந்த ஒரு பிரி வினைச் சேர்ந்தவர்கள் மாலை யில், திருத்தணி- ஆர்.கே.பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிப்பட்டு வட்டாட்சியர் ரேணுகா, திருத்தணி டி.எஸ்.பி., மணியழகன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டோரை சமாதானப் படுத்தினர். அப்போது அவர்கள், 26-ம் தேதி கோட்டாட்சியர் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்துவார். அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.

இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால், ஆர்.கே. பேட்டை பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in