பயணிகள் ரயில் தொடர்ச்சியாக ரத்து: கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் தவிப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

திருப்பூர்: கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் நாள்தோறும் பயன்பட்டு வந்த பெரும்பாலான பயணிகள் ரயில் சேவை தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மாநகரங்கள் தமிழகத்தின் பெரும் தொழில் நகரங்களாக உள்ளன. இந்த மாவட்டங்களுக்கான ரயில் போக்குவரத்தை நம்பி நாள்தோறும் பல லட்சம் மக்கள் உள்ளனர். சேலத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர், கோவை நகரங்களுக்கும், கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலத்துக்கும் தினசரி வேலை, பல்வேறு தொழில் தேவை, படிக்க பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாள்தோறும் பயணிகளின் எண்ணிக்கை ஏராளம்.

இந்த மாவட்டங்களை கடந்து செல்ல, ரயில் பயணம் மிக எளிமையாக இருப்பதால், சீசன் டிக்கெட் உள்ளிட்ட கட்டண சலுகைகள் காரணமாகவும் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணம் மேற்கொள்கிறார்கள். கடந்த சில மாதங்களாக, ரயில்வேயின் திட்டமிடல், பராமரிப்பு மற்றும் தாமதம் காரணமாக ரயிலை நம்பி உள்ள பயணிகளின் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில் பயணிகள் கூறியது: “ரயில்வே நிர்வாகம் கோவை - சேலம் இடையிலான ரயில்களின் அட்டவணைகளை மாற்றி உள்ளது. குறிப்பாக கோவையிலிருந்து தினமும் காலை 9.05 மணிக்கு புறப்பட்டு, சிறு ரயில் நிலையங்களிலும் நின்று சென்ற சேலம் மெமு பாசஞ்சர் ரயில் பல்வேறு காரணங்களை காட்டி 6 மாதமாக இயக்கப்படவில்லை.

சேலத்திலிருந்து மதியம் 1.40-க்கு புறப்பட்டு, மாலை 5 .15 மணிக்கு கோவைக்கு வந்து கொண்டிருந்த மெமு ( MEMU) ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களுக்கு மாறி மாறி தினமும் சென்று வரக்கூடிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் காலையிலும், இரவிலும் பயணித்துக் கொண்டு இருந்தனர். தற்போது அந்த ரயிலும் மார்ச் 6-ம் தேதி வரை, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இரு மார்க்கத்திலும் கோவை - விருதுநகர் இடையே இயங்காது என அறிவித்துள்ளனர்.

மெமு ரயிலும், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலும் இல்லாததால், காலை நேரத்தில் கோவையிலிருந்து புறப்படுபவர்கள், திருச்சி எக்ஸ்பிரஸ் மற்றும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டுமே ஏற வேண்டி உள்ளது. அதிலும் திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் சிங்காநல்லூர், சூலூர், இருகூரில் நிற்பதில்லை. பீளமேடு, வடகோவை மட்டுமே நிற்கிறது.

ரயிலைக் காட்டிலும் பேருந்துக்கு இரு மடங்கு அதிக கட்டணம், பயணக்களைப்பு உள்ளிட்டவற்றை தவிர்க்க பலரும் ரயில் சேவையை நாடுகின்றனர். எளிய மக்களுக்காக இருந்த ரயில் சேவை தற்போது ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் எட்டாத சேவையாக மாறிவிட்டது.

இந்த நகரங்களுக்கு மாறி மாறி வேலைக்கு செல்லக்கூடிய அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், பள்ளி, கல்லுரி மாணவர்கள் என தினமும் பல்லாயிரக்கணக்கானோர் அவதிப்படுகின்றனர். தென்னக ரயில்வே பயணிகளின் நலன் கருதி, பழைய நேர அட்டவணையில் ரயில்களை இயக்கவும், நிறுத்தப்பட்ட மெமு ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கண்ட மாவட்டங்களில் இருந்து அதிக ரயில்களை இயக்க வேண்டும். தமிழகத்தில் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில்களை இயக்கவும், தேவையான நிறுத்தங்களில் நின்று செல்லவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in