

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் சேருவது ராகுல் காந்திக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெள்ளிக்கிழமை (பிப்.10) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சேர்ந்தால் போச்சு... ராகுல் காந்திக்கு என்ன வாய்ப்பு இருந்ததோ, அதுவும் போய்விடும்.
தமிழகத்தில் ஒருமுறை திமுக, இன்னொரு முறை அதிமுக... இது மாதிரி கூட்டணி வைத்து பாஜக அரசியல் செய்தால், வராது. பாஜக தனியாக நிற்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். அதன்பின்னர்தான் பாஜக வளரும்" என்று அவர் கூறினார்.