இபிஎஸ் யார் காலில் விழுந்து பதவி பெற்றார் என்பதை அனைவரும் அறிவார்கள் - கே.எஸ்.அழகிரி 

கே.எஸ்.அழகிரி | கோப்புப் படம்
கே.எஸ்.அழகிரி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: இபிஎஸ் யார் காலில் விழுந்து பதவி பெற்றார் என்பதை அனைவரும் அறிவார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி, கடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. திமுக தலைமை காங்கிரஸுக்கு தொகுதியை ஒதுக்கியது போல, இந்த இடைத் தேர்தலில் அதிமுக ஏன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவில்லை? இதைவிட கூட்டணி தர்மத்திற்கு உலை வைக்கிற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழ் மாநில காங்கிரசை ஒரு கட்சியாகவே கருதாமல் அலட்சியப் போக்கோடு ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுக அபகரித்துக் கொண்டுள்ளது. இதுதான் அதிமுக கூட்டணி கட்சிகளை நடத்துகிற விதம்.

இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை திமுக அடிமைப்படுத்தி நடத்துகிறது என்று ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரக் கூட்டத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை மிகுந்த சுயமரியாதையோடு, சுய சிந்தனையோடு செயல்பட்டு வருகிறோம். ஆனால், அதிமுகவை பொறுத்தவரை யார் காலில் விழுந்து, எப்படி பதவி பெற்றார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். இத்தகைய அடிமைத்தன அரசியல் நடத்தியவர்கள் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in