ரிசர்வ் வங்கி ஆளுநரை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் துணை ஆளுநர் தெரிவித்த கருத்துகளை கண்டித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் தாமஸ் பிராங்கோ தலைமை வகித்தார். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசியவர்கள், “இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் அண்மையில் அமெரிக்காவில் பேசும்போது, பொதுத்துறை வங்கிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் எனில் அவற்றை தனியார்மயமாக்க வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல், ரிசர்வ் வங்கி துணை ஆளுநரும் வாராக் கடன் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் எனில் பொதுத்துறை வங்கிகளை மீண்டும் தனியார் மயமாக்கம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
1991-ம் ஆண்டு முதல் வங்கிகளை தனியார்மயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வருகிறது. அவற்றை நாங்கள் தொடர்ந்து தடுத்து வருகிறோம். இந்நிலையில், மீண்டும் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் இப்பிரச்சினை யைக் கிளப்பியுள்ளனர். எனவே அவர்களின் இந்தப் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என கூறினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
