

டிராவல் ஏஜென்ஸி மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி பல லட்சங்கள் மோசடி செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கிழக்கு முகப்பேரில் பிரியங்கா டூர்ஸ் அண்டு டிராவல் ஏஜென்ஸி உள்ளது. மேற்கு அண்ணா நகரை சேர்ந்த சுமித்ரா(37), விஷ்ணுப் பிரியா(26) ஆகியோர் இணைந்து இந்த டிராவல் ஏஜென்ஸியை நடத்தி வருகின்றனர். கென்யா, நைரோபி உட்பட பல ஆப்பிரிக்க நாடுகளில் வேலை இருப்பதாக கூறி இவர்கள் 82 பேரை அந்த நாடுகளுக்கு அனுப்பி யுள்ளனர். இப்படி அனுப்பப்பட்டவர் களிடம் ரூ.1 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், வேலைக்காக அங்கு சென்றவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. அவர்களுக்கு அங்கு எந்த நிறுவனத்திலும் வேலை இல்லை என்பது பின்னரே தெரியவந் தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் பல கஷ்டங்களுக்கு பின்னர் இந்தியா திரும்பி வந்து, டிராவல் ஏஜென்ஸியிடம் கொடுத்த பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்க ஏஜென்ஸி மறுத்துவிட்டது எனத் தெரிகிறது.
எனவே பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அசோக் நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வளாகத்தில் உள்ள குடிபெயர்வோர் அதிகாரி அஜித்குமாரிடம் புகார் கொடுத்தனர். அஜித்குமார் நடத்திய விசாரணையில் பிரியங்கா டிராவல் ஏஜென்ஸி முறையான அனுமதி பெறாமல் நடத்தப்படுவதை கண்டுபிடித்தார். இதுகுறித்து சென்னை காவல் ஆணையரிடம் அஜித்குமார் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி பிரியங்கா டிராவல் ஏஜென்ஸியின் உரிமையாளர்கள் சுமித்ரா, விஷ்ணுப் பிரியா ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனர்.