Published : 24 May 2017 08:08 AM
Last Updated : 24 May 2017 08:08 AM

‘தி இந்து - பிசினஸ் லைன்’ சார்பில் ஜிஎஸ்டி சவால்கள், தீர்வுகள் குறித்த கூட்டம்: சென்னை, கோவையில் நடைபெறுகிறது

சரக்கு மற்றும் சேவை வரியால் (ஜிஎஸ்டி) சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து ‘தி இந்து - பிசினஸ் லைன்’ சார்பில் நடத்தப்படும் கூட்டம் சென்னை மற்றும் கோவையில் நடைபெறவுள்ளது.

உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சிறந்து விளங்குகிறது. தற்போதைய மத்திய அரசு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவ திலும், வங்கித் துறை, எரிசக்தித் துறையை சீரமைக்க தீர்வுகளை காண்பதிலும், கறுப்புப் பணத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

சரக்கு மற்றும் சேவை வரியை வரும் ஜூலை மாதம்முதல் அமல்படுத்துவதன் மூலம் வரி விதிப்பு முறையிலும் மாற்றம் கொண்டுவர உள்ளது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் இருந்து வந்த வரிவிதிப்பு முறைக்கு பதிலாக இப்புதிய வரிவிதிப்பு முறை அமலாகிறது. மாநில மதிப்புக் கூட்டு வரி, மத்திய கலால் வரி, சேவை வரி, நுழைவு வரி மற்றும் பல மறைமுக வரிகளுக்கு பதிலாக ஒருங்கிணைந்த வரியாக இது இருக்கும்.

புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு மாற சிறிய நிறுவனங் கள் பல இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். தமது ஊழியர் களுக்கு பயிற்சி அளிக்க வேண்டி யிருக்கும். ஆனால் வரி ஏய்ப்பு குறைவான, வெளிப்படையான வரிவிதிப்பு முறையாக நீண்ட காலத்துக்கு இது இருக்கும்.

எனவே சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை புரிந்துகொள்வதற்கும், அதற்கு சுலபமாக மாறுவதற்கும் கற்றுக்கொடுக்கும் கூட்டம் ‘தி இந்து - பிசினஸ் லைன்’ சார்பில் சென்னை மற்றும் கோவை யில் நடைபெறவுள்ளது. அப்போது நிதி, தொழில்நுட்பம், சட்டரீதியான சவால்களை சந்திப்பது, அதற்கான தீர்வுகள் குறித்து விளக்கப்படும்.

சென்னை தி.நகரில் உள்ள அக்கார்ட் மெட்ரோபாலிட்டன் ஹோட்டலில் மே 26-ம் தேதி மாலை 6 மணிக்கும், கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள அலோஃப்ட் ஹோட்டலில் ஜூன் 9-ம் தேதி மாலை 6 மணிக்கும் இக்கூட்டம் நடைபெறுகிறது. கூட் டத்துக்கு பதிவு செய்துகொள்ள 97100 11222 என்ற எண்ணை அழைக்கலாம். அல்லது roopa.shinde@thehindu.co.in. என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.

இதற்கு ஜோஹோ கார்ப், லட்சுமி விலாஸ் வங்கி, மார்க்கெட் ஆஃப் இந்தியா ஆகியவை உறுதுணை புரிகின்றன. சென்னை தொழில், வர்த்தக சபை மற்றும் தமிழ்நாடு சிறு குறு தொழில்கள் சங்கம் ஆகியவை ஒத்துழைப்பு வழங்குகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x