

சென்னை: புவி கண்காணிப்புக்கான ‘இஒஎஸ்-07’ உட்பட 3 செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு, இஸ்ரோவின் சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட் இன்று (பிப். 10) விண்ணில் ஏவப்படுகிறது.
சர்வதேச விண்வெளி சந்தையில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து எடை குறைந்த செயற்கைக்கோள்களை (500 கிலோ வரை) விண்ணில் செலுத்துவதற்காக சிறியரக எஸ்எஸ்எல்வி (Small Satellite Launch Vehicle-SSLV) ராக்கெட்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ புதிதாக வடிவமைத்து வருகிறது. இதன் எடை 120 டன். இதற்கான செலவும் ரூ.30 கோடிக்குள் அடங்கிவிடும்.
அதன்படி இஸ்ரோ வடிவமைத்துள்ள எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட், இஒஎஸ்-07 உட்பட 3 செயற்கைக்கோள்களுடன் இன்று (பிப். 10) காலை 9.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான 6.30 மணி நேர கவுன்ட் டவுன் இன்று அதிகாலை 2.48 மணிக்கு தொடங்கவுள்ளது. தொடர்ந்து விண்ணில் ஏவப்படும் ராக்கெட், சுமார் 15 நிமிடத்தில் புவியில் இருந்து 450 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் 3 செயற்கைக்கோள்களையும் நிலைநிறுத்த உள்ளது.
இந்த திட்டத்தில் முதன்மைச் செயற்கைக்கோளான இஒஎஸ்-7, 156 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது புவி கண்காணிப்பு மற்றும் எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வு பணிகளுக்கு பயன்படும். இதனுடன் அமெரிக்காவின் ஜானஸ், ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் ஆசாதிசாட்-2 ஆகிய 2 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன. ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.