ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு - கோவையில் பலத்த பாதுகாப்பு
கோவை: மதுரை சிறை வார்டர் கொலை வழக்கில் கைதான ஆயுள் தண்டனை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மாநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கோவை உக்கடம் பிலால் எஸ்டேட்டைச் சேர்ந்தவர் அபுதாகீர்(42). இவர், கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி மதுரை சிறை வார்டர் ஜெயப்பிரகாஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அபுதாகீருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக முடக்குவாதம் மற்றும் சிறுநீரகக் கோளாறால் அபுதாகீர் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையை கருத்தில்கொண்டு சிகிச்சை பெற உயர் நீதிமன்றம் நிரந்தர பரோல் வழங்கியதையடுத்து, அவர் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபுதாகீர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாநகர் முழுவதும் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வாகன சோதனையும் நடைபெற்றது.
டவுன்ஹால், உக்கடம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். மாலையில் பூமார்க்கெட் அருகேயுள்ள பள்ளிவாசலில் அபுதாகீர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
