

அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.43 லட்சம் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் அமைக்கப்படுகிறது. 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டை பணிமனையில் கடந்த மார்ச் 7-ம் தேதி நடந்தது. 2-ம்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 4-ம் தேதி நடந்தது. இதில், தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசு போக்குவரத்து ஊழியர்களின் 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இரண்டுகட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில், தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கைகளை முன்வைத்து அமைச்சரிடம் பேசிவருகிறோம். பின்னர் இக்கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படும். பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்’’ என்றனர்.