

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களை, தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி சரிபார்த்து, பூத் சிலிப் வழங்க வேண்டுமென, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ல் நடக்கிறது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அலுவலருக்கு, அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் அனுப்பியிருந்த மனுவில், ‘ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் பாகம் 237-ல் உள்ள 518 வாக்காளர்களில், 23 பேர் இறந்துள்ளனர்.
71 வாக்காளர்கள் மட்டும் இப்பகுதியில் வசிக்கின்றனர். இதர வாக்காளர்கள் இங்கு வசிக்கவில்லை. எனவே, வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்த பின்பே, பூத் சிலிப் வழங்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு, தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ஓ.எஸ். மணியன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் குறித்து தேவையான நடவடிக்கை எடுப்பதோடு, தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்க வேண்டும், என அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து, ஓ.எஸ்.மணியன் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில், 237-வது பாகத்தில் உள்ள 518 வாக்காளர்கள் குறித்த ஆய்வில் கிடைத்த தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இந்த வாக்காளர்களில் 71 பேர் மட்டுமே இங்கு வசிக்கின்றனர். ஆனால், கடந்த தேர்தலில் 409 வாக்குகள் பதிவாகியுள்ளன. பல பகுதிகளில் இதே போன்ற நிலை உள்ளது.
எனவே, வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களை சரிபார்த்து, வாக்காளர் அடையாள அட்டையை பார்த்து உறுதி செய்த பின்பு முறையாக பூத் சிலிப்பை வழங்க வேண்டும். இதையே தமிழக தலைமை தேர்தல் அலுவலரும் வலியுறுத்தியுள்ளார், என்றார்.