Published : 10 Feb 2023 06:10 AM
Last Updated : 10 Feb 2023 06:10 AM
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து, தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், அண்மையில் மதுரையைச் சேர்ந்த ஓர் இளைஞர் மற்றும் சேலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஆகியோர், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
எனவே, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ்: சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த உடையார்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்ற கூலி தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலறிந்து வேதனையடைந்தேன்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு நேரிட்ட 43-வது தற்கொலை இது. கடந்த 3 நாட்களில் நிகழ்ந்த 2-வது தற்கொலை. இவற்றுக்கு ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால், தற்கொலைகள் தொடர்கதையாகிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை அரசும், ஆளுநரும் தடுக்க வேண்டும். எனவே, ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த 3 பேர் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழக அரசு நிறைவேற்றிய முக்கியமான சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது, அரசுக்கு திருப்பி அனுப்புவது, விளக்கம் கொடுத்த பின்னரும் பல மாதங்களாக சட்டங்களைக் கிடப்பில் போட்டுள்ளது என்பதாகவே ஆளுநர் மாளிகையின் செயல்பாடுகள் உள்ளன. எனவே, இனியும் தாமதிக்காது ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT