Published : 10 Feb 2023 06:03 AM
Last Updated : 10 Feb 2023 06:03 AM
சென்னை: அமெரிக்க நிதியுதவியுடன் தமிழக கிராமப்புறங்களில் 17 ஆயிரம் மரகத பூஞ்சோலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிதியுதவி திட்டத்தில் இந்திய வனங்களுக்கு வெளியே மரம் வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இத்திட்ட தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலர் சுப்ரியா சாஹூ திட்டத்தை தொடங்கிவைத்து, வனங்களுக்கு வெளியே காடுவளர்ப்பு குறித்த சிறப்பு கையேட்டை வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தமிழக வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த அமெரிக்க நிதியுதவி திட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. வனங்களுக்கு வெளியேமரம் வளர்ப்பு திட்டத்தில் தொழில்நுட்ப உதவி மற்றும் மண் வளத்துக்கு ஏற்ப மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு திட்டத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’ மூலம் 100 மரகத பூஞ்சோலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அமெரிக்க நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள 17 ஆயிரம் கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் கார்பன் சமநிலை வளர்ச்சியை எட்டிட அனைவரும் ஒருங்கிணைந்து மரம் வளர்ப்பில் கைகோர்த்திட வேண்டும். பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் நடப்பாண்டில் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் வனத் துறை மூலம், அழிந்து வரும் காடுகளை மீட்டெடுக்கவும், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்தை சமநிலைப்படுத்தவும், நபார்டு மற்றும் ஜப்பான் நிதிஉதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வனத்துறை தலைவர் சுப்ரத் மஹாபத்ர, பசுமை தமிழ்நாடு இயக்க இயக்குநர் தீபக் வஸ்தவா, அமெரிக்க தூதரக துணைத் தூதர் ஜீடித் ராவின், இந்தியாவுக்கான அமெரிக்க நிதியுதவி திட்ட இயக்குநர் வீனாரெட்டி, தலைவர் சந்திரசேகர் பிராதார், துணை இயக்குநர் வர்கீஸ் பால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT