

ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுதள்ளதன் மூலம் நீட் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வை மத்திய பாஜக அரசு பிடிவாதமாக நடத்தி முடித்துள்ளது. இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளன. தேர்வு எழுத வந்த மாணவர்களிடம் நடத்தப்பட்ட கெடுபிடிகள் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன.
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தகுதியின் அடிப்படையில் பொது நுழைவுத் தேர்வு என சொல்லிக் கொண்ட ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு கேள்விகள் அடங்கிய வினாத்தாள்கள் அடிப்படையில் நீட் தேர்வு நடந்துள்ளது.
வெவ்வேறு வினாத்தாள்கள் இருந்தால் அது எப்படி பொது நுழைவுத் தேர்வாக இருக்க முடியும்? குஜராத் மாநிலத்தில் கொடுக்கப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள்கள் எளிமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை என்றாலும், காவிரிப் பிரச்சினை என்றாலும் மோடி அரசின் பார்வை அரசியல் சுயநலம் கொண்டதாகவே உள்ளன.
சமூக நீதியை ஒழிப்பதற்காகவே இதுபோல பாஜக அரசு நடந்து கொள்கிறது. நீட் தேர்வில் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. இதனை புரிந்து கொண்டு எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.