

பெரியகுளம்: பெரியகுளம் பகுதி மாமரங்களில் பூக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மா விளைச்சல் இந்த ஆண்டு 50 சதவீதம் அளவிற்கு உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரியகுளம், போடி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பயிர் வளர்ச்சிக்கு ஏற்ற பருவநிலை உள்ளதால் மா விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சோத்துப்பாறை, கோவில்காடு, சின்னாம்பாளையம், முருகமலை, சுக்காம்பாறை, கழுதைகட்டி ஆலமரம், குழாய்த்தொட்டி, உப்புக்காடு, கும்பக்கரை, மஞ்சளாறு, அல்லிநகரம், போடி-சிறைக்காடு, முந்தல் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மாமரங்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. கன்றுகள் நட்டு 4 ஆண்டுகளில் இருந்து பலன் தரும் 75 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் கொண்ட இம்மரம் ஆண்டுக்கு ஒருமுறை விளைச்சல் தரும் குறிப்பாக கோடை காலங்களில் இதன் விளைச்சல் மிக அதிகமாக இருக்கும்.
காசா, கள்ளாமை், அல்போன்சா, செந்தூரம், மல்கோவா, காதர், பங்கனவள்ளி, காலப்பாடி, கிரேப் உள்ளிட்ட பல்வேறு வகையான மா மரங்கள் உள்ளன. இருப்பினும் காசா, கள்ளாமை ரகங்களே இங்கு அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக விளைந்த மாங்காய்களை கரோனா ஊரடங்கினால் சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் வெகுவாய் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு தொடர் மழையினால் பூக்கள் அதிகளவில் உதிர்ந்து மா விளைச்சல் குறைந்தது. இந்த ஆண்டைப் பொறுத்தளவில் தற்போது மாமரங்களில் அதிகளவில் பூக்கள் பூத்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீத்திற்கும் மேல் பூக்களின் எண்ணிக்கை உள்ளது. இதனால் மா விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பூ உதிராமல் இருக்கவும், காய்கள் திரட்சியாக வளரவும் மருந்து தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பெரியகுளத்தைச் சேர்ந்த மா விவசாயி வெற்றிவேல் கூறுகையில், "பாரம்பரியமாக மா விவசாயம் செய்து வருகிறோம். இந்த ஆண்டு அதிகளவில் பூக்கள் பூத்துள்ளதால் மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் சந்தைப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. மாங்காய்களை கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள தனியார் மாம்பழச்சாறு தொழிற்சாலைகளுக்கே அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. ஆகவே பெரியகுளம் பகுதியில் மாம்பழச்சாறு மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைத்தால் உரிய விலை கிடைக்கும். வரும் மார்ச் வரை மழை, அதிக காற்று இல்லாமல் இருந்தால் பூக்கள் உதிராமல் இருக்கும்" என்றார்.