கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தை நீண்டகால குத்தகைக்குவிடும் முடிவை எதிர்த்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை நீண்டகால குத்தகைக்கு விடுவதை எதிர்த்து ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். கடந்தமுறை இந்த வழக்கு விசாரணையின் போது, உயர் நீதிமன்ற கட்டிடத்தையும், கன்னிமாரா நூலக கட்டிடத்தையும் தொல்லியல் துறை முறையாக பராமரிப்பதில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தொல்லியல் துறை தரப்பில், "அர்த்தநாரீஸ்வரர் கோயிலை பராமரிக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், "மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுக்கும் அரசு, அர்த்தநாரீஸ்வரர் கோயிலை முறையாக பராமரிப்பது இல்லை" என புகார் தெரிவிக்கப்பட்டது.

அப்போது இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், "கோயிலை 2 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்து குடமுழுக்கு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் எத்தனை கோயில்களை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், அர்த்தநாரீஸ்வரர் கோவில் சீரமைப்பு பணிகளுக்கு எப்போது நிதி ஒதுக்கப்படும்? எப்போது பணிகள் துவங்கப்படும்? எப்போது பணிகள் முடித்து, குடமுழுக்கு நடத்தப்படும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in