சென்னை அண்ணா சாலை கட்டிட விபத்து: ஒப்பந்ததாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடத்தின் இடிபாடுகள் விழுந்து இளம்பெண் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடத்தை ஜேசிபி மூலம் இடிக்கும்போது அந்தப் பகுதியில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் மீது கட்டிடத்தின் இடிபாடுகள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மதுரையை சேர்ந்த பத்மபிரியா என்ற 22 வயது தனியார் நிறுவன ஊழியர் உயிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீசார், ஒப்பந்ததாரர் அப்துல்ரஹ்மான் உள்ளிட்டோரை கைது செய்தனர். கட்டிடத்தின் உரிமையாளர் தலைமறைவாக உள்ளார். இந்த வழக்கில் ஜனவரி 29-ம் தேதி கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் அப்துல் ரஹ்மான், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "கட்டிடத்தை இடிக்கும் முன் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சம்பவம் நடந்தபோது நான் அந்த இடத்தில் இல்லை" என்றும் வாதிடப்பட்டது.

அப்போது காவல் துறை தரப்பில், "எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யாமல் கட்டிடம் இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடந்து வருவதால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "இந்தச் சம்பவத்தில் இளம்பெண் பலியாகியுள்ளார். விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. மேலும் மனுதாரர் கைது செய்யப்பட்டு குறைவான நாட்களே ஆவதால் ஜாமீன் வழங்க முடியாது” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in