ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | திமுகவிற்கு பயம் வந்துவிட்டது: பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை | கோப்புப் படம்
பாஜக தலைவர் அண்ணாமலை | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக திமுகவிற்கு பயம் வந்துவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இன்று (பிப்.9) பாலவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்," ஜி20 தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வந்துள்ளது. இதை குறிக்கும் விதமாக 10 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது 13வது சட்ட திருத்தம் விவகாரம் தொடர்பாக இன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறேன். பாஜக அரசு வந்த பிறகு மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு குறைந்துள்ளது. வெகு விரைவில் இந்தியா- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கும்.

ஈரோடு கிழக்கு வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்க அதிமுக அழைப்பு கொடுத்துள்ளது. நான் இலங்கை செல்வதால் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார். ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். நாங்கள் அனைவரும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற பாடுபடுவோம். எல்லோரும் களத்தில் இறங்கி பணியாற்றுவார்கள். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். நானும் பிரச்சாரம் மேற்கொள்வேன்.

கூட்டணி தர்மத்தின்படி கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் களம் இறக்கப்பட்டுள்ளார். அவரை வெற்றி பெற வைக்க வேண்டியது நமது கடமை. அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெறுவார்.

திமுக கூட்டணி வேட்பாளருக்காக முதல்வர் 2 நாட்களில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இடைத் தேர்தலுக்கு முதல்வர், இத்தனை அமைச்சர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். ஆளும் கட்சி பயந்து, முதல்வர் பயந்து இவ்வளவு அமைச்சர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். ஒரு ஆளும் கட்சி இந்த அளவுக்கு இடைத்தேர்தலை பயத்துடன் எதிர்கொண்டதாக சரித்திரம் இல்லை. திமுகவிற்கு பயம் வந்துவிட்டது" இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in