மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு - உச்ச நீதிமன்றத்தில் மீனவர்கள் வழக்கு

மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு - உச்ச நீதிமன்றத்தில் மீனவர்கள் வழக்கு
Updated on
1 min read

புதுடெல்லி: மெரினா கடலில் பேனா நினைவு சி்ன்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த தங்கம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த பாகன் உள்ளிட்ட மீனவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு:

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை அறியாமல் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. குறிப்பாக மீனவர்களின் கருத்தை அறியாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மிக பிரம்மாண்டமான பேனா நினைவு சின்னத்தை கடலுக்குள் வைப்பது என்பது இயற்கை நீதிக்கு எதிரானது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும்.

இந்த சின்னம் அமையவுள்ள பகுதி கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிக்குள் வருவதால் கடல் வளமும் பாதிப்படையும். இதையெல்லாம் அறிந்தே மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் தடையின்றி அனுமதி வழங்கியுள்ளனர்.

பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல சூழலியலாளர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு அதை கருத்தில் கொள்ளவில்லை. சென்னை மாநகரில் நினைவு சின்னங்கள் அமைக்க பல்வேறு இடங்கள் இருக்கும்போது மெரினா கடற்கரை மற்றும் மெரினா கடலை அரசு இயந்திரங்கள் தேர்வு செய்வது என்பது இயற்கை சூழலுக்கு எதிரானது.

இதனால் கடல் வளமும், கடல் சூழலும் பாதிக்கப்பட்டு அதனால் மீனவர்களும் கடுமையாக பாதிப்படைய நேரிடும். இந்த பேனா நினைவு சின்னத்தால் கடலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள 32 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும்.

ஏற்கெனவே உலகின் மிகநீளமான கடற்கரைகளில் ஒன்றான மெரினா கடற்கரையை அரசியல் கட்சியினர் கல்லறைத் தோட்டமாக மாற்றி வரும் நிலையில், பேனா நினைவு சின்னத்தை மெரினா கடலில் அமைக்க தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பான உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். இச்சின்னத்தை வேறு இடத்தில் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in