

புதுடெல்லி: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கு நிரந்தரமாக தடைவிதிக்கும் அதிகாரம் உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு இல்லை எனக் கூறி அந்த தடைஉத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித் தது.
பேராபத்தை விளைவிக்கும்: மேலும், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட குற்றவியல் வழக்குகளையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், “குட்கா, பான் மசாலாஉள்ளிட்ட புகையிலைப் பொருட்களினால் ஏற்படும் பேராபத்தைக் கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் அந்தப் பொருட்களை விற்பதோ அல்லது பதுக்குவதோ சட்டவிரோதம் எனக்கூறி அதற்கு தடை விதித்தது.
ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்துசெய்துள்ளது. எனவே இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்” என அதில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசார ணைக்கு வரவுள்ளது.