ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் பிரச்சாரம் குறித்து தலைமை முடிவு செய்யும்: தமிழ்மகன் உசேன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, தேர்தல் பணிக்குழுவினருடன் ஆலோசனை மேற்கொள்ள ஈரோடு வந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு, வேட்பாளர் தென்னரசு வரவேற்பு அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, தேர்தல் பணிக்குழுவினருடன் ஆலோசனை மேற்கொள்ள ஈரோடு வந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு, வேட்பாளர் தென்னரசு வரவேற்பு அளித்தார்.
Updated on
1 min read

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்வது தொடர்பாக அதிமுக தலைமை முடிவு செய்யும், என அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தேர்தல் பணிக்குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, ஈரோட்டைச் சேர்ந்த தொழில் முனைவோரைச் சந்தித்து பழனிசாமி ஆதரவு கோரினார்.

ஆலோசனைக்குப் பின்னர், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் வில்லரசம்பட்டியில் உள்ள டீக்கடைக்குச் சென்ற பழனிசாமி, அங்கு பொதுமக்களுடன் அமர்ந்து டீ அருந்தினார். ஆலோசனையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்களிடம், ஓபிஎஸ் அணியினர் பிரச்சாரம் மேற்கொள்வார்களா என செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், ‘பிரச்சாரம் குறித்து தலைமை முடிவு செய்யும்’ என்றும், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, ‘கூட்டணிக் கட்சியினர் பிரச்சாரத்தில் பங்கேற்பார்கள்’ என்றும் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறும்போது, ‘இடைத்தேர்தலுக்காக எத்தனை அமைச்சர்கள் முகாமிட்டாலும் அதிமுக வெற்றி பெறும்.

அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்’ என்றார். சட்டப்பேரவை முன்னாள் துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறும்போது, ‘கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை. எனவே, வாக்கு கேட்டு வரட்டும் என பொதுமக்கள் கோபத்துடன் காத்திருக்கின்றனர்.

ஓபிஎஸ் பிரச்சாரம் குறித்து மேலிட தலைவர்கள் பேசுவார்கள்’ என்றார். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் வில்லரசம்பட்டியில் உள்ள டீக்கடைக்குச் சென்ற பழனிசாமி, அங்கு பொதுமக்களுடன் அமர்ந்து டீ அருந்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in