

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் பழனிசாமி தரப்பு நட்சத்திர பேச்சாளர்கள் 40 பேருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
ஓபிஎஸ் தரப்பில் வழங்கப்பட்ட பட்டியலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக என 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் பழனிசாமி தரப்பில் நிறுத்தப்பட்ட கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் தொகுதியில் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் 40 பேரின் பட்டியல் ஒப்புதலுக்காக பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டிருந்தது.
ஓபிஎஸ் தரப்பிலும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பழனிசாமி அளித்திருந்த பட்டியலுக்கு தேர்தல் ஆணையம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த பட்டியலில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், சி.பொன்னையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன்,
டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பா.வளர்மதி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், எஸ்.கோகுல இந்திரா, சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, பா.பெஞ்சமின், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உடுமலை ராதாகிருஷ்ணன்,
வைகை செல்வன், ஆர்.கமலநாதன், பி.மோகன், கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், கே.சி.வீரமணி, மற்றும் ஆர்.இளங்கோவன், ராஜ் சத்யன், கே.சி.பழனிசாமி, பெரியார் நகர் மனோகரன், பி.கேசவமூர்த்தி, பி.ஜெயராஜ், கே.ராமசாமி, எஸ்.முருகசேகர், எஸ்.டி.தங்கமுத்து ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பில் வழங்கப்பட்ட பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்துள்ளது. இது ஓபிஎஸ் ஆதரவாளர் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.