

சென்னை: சென்னை மாநகராட்சியில் முதிர் கொசுக்களை அழிக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த, ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தண்டையார்பேட்டை மண்டலம் 36-வது வார்டுக்கு உட்பட்ட கேப்டன் காட்டன் கால்வாயில் நேற்று ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு, கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மீண்டும் இனப்பெருக்கம்: மாநகராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட இடத்தில் முதிர் கொசுக்களை அழிக்க புகை பரப்பும் பணியையும், கால்வாய்களில் கொசுப்புழுக்களை அழிக்கும் பணிகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்வதில்லை. கொசுத் தொல்லை புகார் வந்தால் மட்டுமே, புகை பரப்புவதை மேற்கொள்கிறது. மேலும், கொசுப்புழுக்களை ஒழிக்க ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது.
எனவே, நீர்வழித் தடங்களில் கொசுப்புழுக்களை அழிக்க ட்ரோன் மூலம் கொசுப்புழுக் கொல்லிகளை தெளிக்கும் நாளன்றே, முதிர் கொசுக்களை ஒழிக்கவும் புகை பரப்ப வேண்டும். அப்போதுதான் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த முடியும்.
இந்தப் பணிகளை வெவ்வேறு நாட்களில் மேற்கொள்ளும்போது, நீர்வழித் தடங்களில் முதிர் கொசுக்கள் மீண்டும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். எனவே, கொசுப்புழுக்களை அழிக்கும் தினத்தன்றே, முதிர் கொசுக்களையும் அழிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூச்சியியல் துறை வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒரே சமயத்தில் நடவடிக்கை: இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ``கொசுப்புழு, முதிர் கொசு ஆகியவற்றை அழிக்கும் பணிகளை ஒன்றாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மழைநீர் வடிகால்களிலும் புகை மருந்தை பரப்ப அனைத்து மண்டல பூச்சியியல் வல்லுநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றனர்.