

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மத்திய ஆய்வகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பரிசோதனை முடிவுகளை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர். இந்த மருத்துவமனையில் நோய் பரிசோதனைகள் செய்வதற்கு மத்திய ஆய்வகம் உள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த ஆய்வகத்தில் நுண்ணுயிரியல் துறை, உடற்கூறு இயல், உயிர் வேதியியல் துறையைச் சேர்ந்த ஆய்வக நுட்புநர்கள், உதவியாளர்கள் பணிபுரிகின்றனர்.
நோயாளிகளுக்கான ரத்தப் பரிசோதனை(சிபிசி), சர்க்கரை அளவு, யூரியா, மஞ்சள் காமாலை உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. ஒரு நாளைக்கு 800 நோயாளிகளுக்கு நோய் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில், தற்போது இந்த ஆய்வகத்தில் ஆய்வக நுட்புநர்கள், மருத்துவம் சாரா உதவியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
பெரும்பாலும் மாணவர்களை கொண்டே ஆய்வுகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்புநர் சங்க மதுரை மற்றும் தேனி ஒருங்கிணைந்த மாவட்ட கிளை செயலாளர் கே.வி.சரவணன் கூறுகையில், உடல் கூறுயியல் மற்றும் உயிர் வேதியியல் துறையில் மட்டும் ஒரு கண்காணிப்பாளர் உட்பட 6 பேர் பணிபரிகிறார்கள்.
நுண்ணுயிரியல் துறையில் ஒரு பணியாளர் கூட இல்லை. மற்ற துறைகளிலும் காலி பணியிடங்கள் அதிகரித்துள்ளன. போதிய பணியாளர்கள் இல்லாததால் பரிசோதனை பணிகளை மேற்கொள்ள காலையில் மாணவர்களை கொண்டு சமாளிக்கப்படுகிறது. இரவு பணியின்போது மட்டும் 250 முதல் 300 பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
போதிய பணியாளர்கள் இல்லாததால் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. நோயாளிகளுக்கு உடனுக்குடன் பரிசோதனை முடிவுகளை வழங்க முடியாமல் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, நோயாளிகளின் நலன் கருதி மத்திய ஆய்வகத்தில் போதுமான பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.