Published : 27 May 2017 10:15 AM
Last Updated : 27 May 2017 10:15 AM

முன் அறிவிப்பின்றி ஐடி நிறுவன ஊழியர்கள் பணி நீக்கம்:அரசு தலையிட விஜயகாந்த் வலியுறுத்தல்

தமிழக ஐடி துறையில் முன் அறிவிப்பின்றி வேலை நீக்கம் நடைபெற்று வருவது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தமிழகத்தில் IT துறையில் பணிபுரியும் தொழிலாளர்களை LAYOFF முறையில் பல IT நிறுவனங்கள் முன் அறிவிப்பு இன்றி பணி நீக்கம் செய்துவருகிறார்கள். அதன் காரணமாக இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையிழந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்களின் மெத்தனப்போக்கால் தமிழகத்தில் இருந்து கியா மோட்டார்ஸ் (KIA MOTORS) போன்ற பல தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டது. தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அதிமுக அரசு நிலையற்ற தன்மையில் உள்ளதால், எந்த அமைச்சர்களும் தங்கள் துறையில் சரியான கவனம் செலுத்தாததால், தமிழகம் அனைத்து துறைகளும் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

IT நிறுவனங்கள் குறைந்த சம்பளத்தை கொடுத்து அதிகலாபம் சம்பாதித்தாலும், அதில் பணிபுரிபவர்களை திடீர், திடீர் என்று வேலையில் இருந்து நீக்கம் செய்வதால் அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது.

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்கள் இனிமேலாவது விழித்தெழுந்து உடனடியாக IT துறை மட்டும்மல்லாமல் அனைத்து தொழில்துறையிலும் கவனம் செலுத்தி அதில் பணிபுரிபவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

அப்பொழுது அனைத்து மாவட்டங்களுக்கும் தொழிற்சாலைகள் துவங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் இதுவரை எங்கும் துவங்கியதாக எந்தவொரு எடுத்துக்காட்டும் இல்லை. 85 லட்சம் இளைஞர்கள் ஏற்கனவே வேலை இழந்த நிலையில், அமைச்சர் அவர்கள் தொழில்துறையில் முழு கவனத்தை செலுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அந்த அறிக்கையில் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x