மாடுகளை விற்க தடை விதித்திருப்பது சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்: டி.ராஜா குற்றச்சாட்டு

மாடுகளை விற்க தடை விதித்திருப்பது சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்: டி.ராஜா குற்றச்சாட்டு
Updated on
1 min read

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருப்பது தலித் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் முதல் மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. மாநாட்டில் டி.ராஜா பேசியதாவது:

மோடியின் 3 ஆண்டு ஆட்சியில் இந்தியா முழுவதும் தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது கொடூர தாக்குதல் நடைபெறுகிறது.

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ்காரர்கள் தலித் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது வன்முறையை ஏவி வருகின்றனர். இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்களை விற்க பாஜக அரசு தடைவிதித்து இருக்கிறது. இது தலித் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல் ஆகும். மேலும் இது மனித உரிமையை பறிக்கும் அறிவிப்பாகும்.

மக்களின் கலாச்சாரம், உணவு முறை போன்ற முக்கிய அம்சங்களில் மாற்றம் கொண்டு வரும் போது நாடாளுமன்றத்தை கூட்டி விவாதம் நடத்தி சட்டம் இயற்றப்பட வேண்டும். ஆனால் மோடி அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதே இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்.நல்லகண்ணு பேசும்போது, “அரசியல்வாதிகள் தூண்டிவிடும் சாதி கலவரங்களால் பெரிதும் பாதிக்கப்படுவது ஏழைகளும் ஒடுக்கப்பட்ட மக்களும்தான். வெள்ளம் வந்தாலும் வறட்சி ஏற்பட்டாலும் அவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நம் நாட்டில் படிக்காத தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பல்கலைக்கழகம் வரை சென்று உயர் பட்டம் பெற்ற தலித் மாணவர் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. சாதிய ஒடுக்குமுறையால் ரோகித் வெமூலா கொல்லப்பட்டான். கல்வியால் சாதியை ஒழிக்க முடியவில்லை. தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற அநீதிகளும் அத்துமீறல்களும் வேதனை தருகின்றன” என்றார்.

இரா.முத்தரசன் கூறும்போது, “மோடி அரசின் தடையை மீறுவோம். பாஜக அரசை எதிர்த்து போராடுவோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in