

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஏ.கே.வேலன் தாக்கல் செய்த மனுவில், ‘‘மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் தங்களது சலுகைகள் பறிபோவதாக கூறி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளி கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என கோரியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன், ‘‘போராடும் அரசு மருத்துவர்களிடம், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதன் பின்னரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாவிட்டால் அவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்” என நேற்று முன்தினம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இவ்வழக்கு நேற்று மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் சார்பில் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ‘‘அங்கீகரிக்கப்படாத சங்கங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் போராடினால் அவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.