மவுலிவாக்கம் கட்டிட விபத்து - மீட்பு குழுவினர் சிறப்பாக செயல்பட்டனர்: துணை கமாண்டன்ட் பேட்டி
மவுலிவாக்கத்தில் நடந்த மீட்புப்பணிகளின் போது மீட்பு குழுவை சேர்ந்தவர்கள் சிறப்பாக செயல்பட்டதாக தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவின் துணை கமாண்டன்ட் வி.கே.வர்மா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கட்டிடம் இடிந்து விழுந்த நாள் முதல் வெள்ளிக்கிழமை வரை 400-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இவர்கள் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு குழுவிற்கு 10 பேர் வீதம் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிருடன் மீட்க அவர்கள் தீவிரமாக செயல்பட்டனர். இந்த மீட்பு பணி வெயில்,மழை பாராது 24 மணி நேரமும் நடந்தது.
எங்களது குழுவை சேர்ந்தவர்கள் சிலர் முதல் 4 நாட்களுக்கு ஆடையைக் கூட மாற்றாமல் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். எங்களிடம் இருந்த தெர்மல் கேப்ட்சரிங் கேமரா போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மீட்பு பணிகளை மேற்கொள்ள பெருமளவில் கைகொடுத்தன. சிலர் மீட்பு பணிகள் மெதுவாக நடந்ததாக கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. அவசர அவசரமாக இயந்திரங்களை இயக்கினால் கான்கிரீட் துண்டுகளில் சிக்கியவர்கள் உயிரிழக்க நேரிடும் என்பதை மனதில் கொண்டே மீட்பு பணிகள் நிதானமாக நடந்தது. அதனால்தான் 27 பேரை உயிருடன் மீட்க முடிந்தது. எங்கள் குழுவைச் சேர்ந்த வீரர்கள் முழு அர்ப்பணிப்புடன் சிறப்பாகவே செயல்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
