ஆன்லைன் மூலமாக மணல் விற்பனையை அரசே நேரடியாக மேற்கொள்ள வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

ஆன்லைன் மூலமாக மணல் விற்பனையை அரசே நேரடியாக மேற்கொள்ள வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
Updated on
1 min read

மணல் விற்பனையை ஆன்-லைன் மூலம் அரசே நேரடியாக செய்ய வேண்டும் என்று தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் யுவராஜ் வலியுறுத்தி யுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். மணல் விற்பனை அரசின் நேரடி கண்காணிப்பில் நடக்க வேண்டும். மணல் கடத்தப்படுவதைத் தடுக்க தனியாக பறக்கும் படை அமைக்க வேண்டும்.

மணல் கடத்தல்காரர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் லாரிகளை எளிதில் கண்டுகொள்ள வசதியாக அவற்றுக்கு தனி வர்ணம் பூச வேண்டும்.

இடைத்தரகர் இல்லாமல்

மணல் லாரிகளின் போக்கு வரத்தைக் கண்காணிக்க அனைத்து மணல் லாரிகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும். மாநில எல்லையில் உள்ள வாகன சோதனைச் சாவடியில் கண்காணிப்பு கேமராக் கள் பொருத்தி மணல் லாரிகளைக் கண்காணிக்க வேண்டும். மணல் அள்ளிப்போடுவது, விற்பனை செய்வது என அனைத்து பணிகளையும் இடைத்தரகர் இல்லாமல் அரசே மேற்கொள்ள வேண்டும்.

மணல் விற்பனையின்போது பணத்தை ஆன்-லைனில் செலுத்த உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் பொதுமக்களுக்கு நியாயமான, குறைந்த விலையில் மணல் கிடைப்பதுடன், அரசுக் கும் கணிசமான வருவாய் கிடைக்கும். அரசே மணல் அள்ளி விற்பனை செய்தால் நீர்வளம் பாதிக்கப்படாது.

மணல் விற்பனையால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி முதல் ரூ.20 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும்.

மணலுக்கு மாற்றான எம்.சாண்ட் தயாரிப்பதற்கு முன்னுரிமை அடிப்படையில் 100 எம்-சாண்ட் தொழிற்சாலை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும். அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

இதன்மூலம் தினமும் 50 லோடு எம்-சாண்ட் கிடைக்கும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதற்குள் எம்-சாண்ட் தொழிற்சாலைகள் முழுவீச்சில் செயல்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு யுவராஜ் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in