Published : 07 May 2017 05:20 PM
Last Updated : 07 May 2017 05:20 PM

சென்னை மியூசிக் அகாடமியில் கர்நாடக இசையில் டிப்ளமோ படிக்க விண்ணப்பிக்கலாம்

சென்னை மியூசிக் அகாடமியில் வழங்கப்படும் கர்நாடக இசை (வாய்ப்பாட்டு) அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜுன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மியூசிக் அகாடமி வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில், ''சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் கர்நாடக இசையில் (வாய்ப்பாட்டு) அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது. இது 3 ஆண்டு கால படிப்பாகும். ஆண்டுக்கு 2 செமஸ்டர்கள் (ஜூலை முதல் நவம்பர் மற்றும் ஜனவரி முதல் ஜூன் வரை). இதற்கான வகுப்புகள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடை பெறும். மொத்தம் 10 இடங்கள் உள்ளன.

இந்த டிப்ளமோ படிப்பில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். மனோதர்ம சங்கீத அறிவுடன் வர்ணம் மற்றும் கிருதிகள் பாடத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் இசைப் பயிற்சி பற்றிய முழு விவரங்களுடன், சுயவிவரக் குறிப்பை (பயோ-டேட்டா) ஜூன் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். வரப்பெறும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வு செய்யப்படுவோருக்கு அதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும். வகுப்புகள் ஜூலை 19-ம் தேதி (புதன்கிழமை) தொடங்கும்.

திருச்சூர் சங்கீத கலாநிதி இயக்குநர் ஆர்.வேதவல்லி, கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ராமச்சந்திரன், பேராசிரியை ரீதா ராஜன், மற்றும் ஆர்.எஸ்.ஜெயலட்சுமி, பி.எஸ்.நாராயணசாமி, சுகுணா வரதாச்சாரி, நெய்வேலி சந்தான கோபாலன், எஸ்.சவுமியா, ஷியாமளா வெங்கடேஸ்வரன், ஸ்ரீராம் பரசுராம் ஆகிய மூத்த கர்நாடக இசைக் கலைஞர்கள் வகுப்பு எடுப்பார்கள்.

கூடுதல் விவரங்கள் அறிய சென்னை ராயப்பேட்டை டிடிகே சாலையில் அமைந்துள்ள மியூசிக் அகாடமியை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 044-28112231, 28115162'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x