

ஈரோடு: ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் அருகேயுள்ள எளையம் பாளையத்தைச் சேர்ந்தவர் இ.எம்.பழனிசாமி. விவசாயியான இவர், கட்டை கரும்பில் ஏக்கருக்கு 52 டன் மகசூல் எடுத்துள்ளார்.
இவருக்கு மாவட்ட உழவர் விவாதக் குழு மற்றும் கீழ் பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா கவுந்தப்பாடியில் நடந்தது. பகிர்மான கமிட்டித் தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு துணை தலைவர் ஏ.எஸ். பழனிசாமி, கவுந்தப்பாடி கோட்ட உதவி மேலாளர் (கரும்பு) சிவசாமி, வன அலுவலர் தம்ம நாயக்கர் ஆகியோர், முன்னோடி விவசாயி பழனிசாமிக்கு பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியில் விவசாயி பழனிசாமி பேசியதாவது: கடந்த 26 ஆண்டுகளாக கரும்பு பயிர் செய்து வருகிறேன். தோகை மூடாக்கு, கட்டை சீவுதல், சொட்டை நிரப்புதல், கங்கு வெட்டுதல், குழியுரமிடல் போன்ற தொழில் நுட்பங்களை கடைப்பிடித்ததால் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் ஏக்கருக்கு 8 டன் கூடுதலாக மகசூல் கிடைத்தது. இயந்திரம் மூலம் அறுவடை செய்ததால் வெட்டுக்கூலி செலவு டன்னுக்கு ரூ.400 மீதமானது, என்றார்.