Published : 08 Feb 2023 06:51 AM
Last Updated : 08 Feb 2023 06:51 AM
சென்னை: ‘புதுமைப் பெண்’ இரண்டாம் கட்டதிட்டத்தை பட்டாபிராம் இந்துகல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் கடந்த ஆண்டுசெப்டம்பர் 5-ம் தேதி நடைபெற்ற விழாவில், டெல்லி முதல்வர்அர்விந்த் கேஜ்ரிவால் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர்உரிமைத் துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர் கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், பெண்களுக்கான தொழில்வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.
புதுமைப் பெண் திட்டத்தின் முதற்கட்டத்தில் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் இடைநிற்றலில் இருந்து 12,000 மாணவிகள் மீண்டும் உயர் கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெறவுள்ள விழாவில் மேலும் 1,04,347 மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
இவ்விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 12,000 மாணவிகள் மீண்டும் உயர் கல்வியில் சேர்ந்து பயனடைந் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT