Published : 08 Feb 2023 06:22 AM
Last Updated : 08 Feb 2023 06:22 AM
சென்னை: மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி செயலாளர் மூகாம்பிகா ரத்தினம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளாவில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறுகால விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக இதைச் செயல்படுத்தியுள்ள கேரள அரசை மநீம பாராட்டுகிறது.
கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்படுத்திய இந்தத் திட்டத்தை,மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு கேரள அரசு விரிவுபடுத்தியுள்ளது. பெண்கள், சிறுமிகள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்க்க இதுபோன்ற முன்னெடுப்புகள் அவசியம்.
மாணவிகளின் நலன் கருதி தமிழகத்திலும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அதேபோல, கல்லூரி, பள்ளி மாணவிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களைப் போக்க இதுபோன்ற முன்னோடி திட்டங்களை செயல்படுத்தவும், தக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசும், கல்வித் துறையும் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT