ரூ.350 கோடி நிலுவை; ரூ.5 லட்சத்துக்கு மேல் 499 பேர் வரி செலுத்தவில்லை: சொத்து வரி நிலுவை வைத்திருப்போர் உடைமைகளை ஜப்தி செய்ய சென்னை மாநகராட்சி திட்டம்

ரூ.350 கோடி நிலுவை; ரூ.5 லட்சத்துக்கு மேல் 499 பேர் வரி செலுத்தவில்லை: சொத்து வரி நிலுவை வைத்திருப்போர் உடைமைகளை ஜப்தி செய்ய சென்னை மாநகராட்சி திட்டம்
Updated on
2 min read

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனமாக சொத்து வரி உள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது சுமார் 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். மாநகரின் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாதந்தோறும் ஊதியம், ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சொத்து வரி வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது.

மாநகராட்சி விதிகளின்படி சொத்துகள் மதிப்பீடு செய்யப்பட்டு சொத்து வரி விதிக்கப்படுகிறது. சொத்து வரியானது அரையாண்டுக்கு ஒருமுறை செலுத்த வேண்டும்.

மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்துவரியின்படி ஆண்டுக்கு சுமார் ரூ.1400 கோடி சொத்து வரி வருவாய் கிடைக்க வேண்டும். நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.694 கோடியும், 2-ம் அரையாண்டில் தற்போது வரை ரூ.451 கோடிக்குமேல் வசூலாகியுள்ளது. மாநகராட்சி விதிகளில் கடுமையான அம்சங்கள் இல்லாததால் சிலர் பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.

சொத்து வரி வருவாய் உயர்த்த மாநகராட்சி சார்பில் ட்ரோன் மூலம் அளவீடு செய்து, சொத்தின் வரி விதிப்புக்கு உட்பட்ட பரப்பின் அளவை துல்லியமாக கணக்கிட்டு, அதன் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரி விதித்து வருகிறது. இதன் மூலம் மாநகராட்சியின் சொத்து வரி வருவாய் அதிகரித்துள்ளது. இது மட்டுமல்லாது, நீண்ட காலமாக செலுத்தாத நிலுவை சொத்து வரி ரூ.350 கோடியை வசூலிக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, ரூ.25 லட்சத்துக்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்துள்ள 38 தனி நபர் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள், ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை நிலுவை வைத்துள்ள 140 பேர், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிலுவை வைத்துள்ள 321 பேர் என மொத்தம் 499 பேரின் விவரங்களை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision/ என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இவர்களிடமிருந்து மட்டும் ரூ.66 கோடியே 37 லட்சம் வரிவசூலிக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் அடுத்தகட்டமாக இவர்களின்உடைமைகளை ஜப்தி செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் 5 லட்சத்து 93 ஆயிரம்பேர் ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாக சொத்து வரி நிலுவை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சொத்துவரி செலுத்தாததால் மாநகராட்சி நிர்வாகம் இதுவரை ஜப்தி நடவடிக்கையை மேற்கொண்டதில்லை. இப்போது எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. பல ஆண்டுகளாக நிலுவை வைத்திருப்போரிடம் பல முறை கனிவாக கேட்டு பார்த்துவிட்டோம். எதற்கும் மசியாததால் ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்வது என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதற்கான விதிகளை உருவாக்கி, மன்றத்தின் ஒப்புதலுடன் அரசின் அனுமதியை பெற இருக்கிறோம். அரசின் அனுமதிக்காக காத்திருக்காமல், மாநகராட்சி சட்ட விதிகளில் உள்ள அம்சங்கள் அடிப்படையில் மார்ச் மாதம் முதல் ஜப்தி நடவடிக்கையை தொடங்க இருக்கிறோம். வரி செலுத்துவதை எளிமைப்படுத்த கிரெடிட் கார்டு மூலம் மாத தவணை முறையில் செலுத்தும் வசதி விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in