

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 324.4 மிமீ மழை பதிவானது. பலத்த காற்றில் பறந்து வந்த தகரம் அறுத்ததில் பெண் பலியானார்.
சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் தகித்து கொண்டிருந்த வேளையில், நேற்று முன்தினம் மாலை திடீரென இதமான காற்று வீசத் தொடங்கியது. சற்று நேரத்தில் காற்றின் வேகம் அதிகரித்து, சுழன்று சுழன்று காற்று வீசியதில் ரோட்டில் ஒருவரும் நடக்க முடியாத அளவுக்கு காற்றின் தாக்கம் இருந்தது.
சேலத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. காற்றின் வேகத்தால் மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பொறி சாலையில் கொட்டியதால், மக்கள் அச்சம் அடைந்தனர். இடியும், மின்னலும் கைக்கோர்த்துக் கொண்ட நிலையில் நேற்று முன்தினம் 6.30 மணிக்கு பெய்த மழை, கனமழையாக உருவெடுத்து இரவு 9 மணியை கடந்தும் பெய்தது. மாவட்டத்தின் பல இடங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.
சேலம் மாவட்டத்தில் 324.4 மிமீ மழை பதிவானது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்): வீரகனூர் 53, எடப்பாடி 40, தம்மம்பட்டி 30.2, வாழப்பாடி 26.4, ஆணைமடுவு 26, கெங்கவல்லி 25.2, காடையாம்பட்டி 19, சங்ககிரி 15.4, பெத்தநாயக்கன்பாளையம் 12, கரியக்கோயில் 11, ஏற்காடு 8.9, மேட்டூர் 7.6, ஆத்தூர் 5.4, சேலம் 32 மழை பதிவாகியுள்ளது.
பெண் பலி
கெங்கவல்லி தெடாவூர் தெற்கு மேல்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு தர்ஷன் (6), தர்ஷின் (4) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் காற்று பலமாக வீசியபோது, வெளியே விளையாடிக் கொண்டிருந்த இரு மகன்களை வீட்டுக்குள் அனுப்பிய மகேஸ்வரி, கட்டிலை எடுத்து வீட்டுக்குள் போட முயன்றார்.
அப்போது, வீசிய பலத்த காற்றில் அங்குள்ள மாட்டு கொட்டகை சரிந்து விழுந்தது. கொட்டகைக்கு போடப்பட்டிருந்த தகரம் பறந்து வந்து மகேஸ்வரி தலையில் விழுந்து கழுத்தை அறுத்தது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் கெங்கவல்லி அரசு மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.